மேலும் அந்த அறிக்கையில்,
அனைத்துலகச் சமூகத்தின் முன்னால் சனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு, அறவழியில் போராடிய மக்களின் உரிமையினை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது கைதுகள், விசாரணைகள் மூலமாக அடக்கியொடுக்குவதற்கு முயலும் இந்த அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னால் வெட்ட வெளிச்சமாக்கப்பட வேண்டியவையாகும்.
இலங்கை அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான பதிலொன்றைக் கூறுவதற்கு இயலாத அரசு, அவற்றுக்கான பதில் கோரிப் போராடும் உறவுகளை இன்று வரையில் வீதியில் விட்டுள்ளதோடு, அவர்களுக்கான பரிகாரநீதியையும் மறுத்து வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தங்கள் உறவுகளுக்கு நேர்ந்த கதிக்கு பதில் கோரி அறவழியில்ப் போராடும் உறவுகளின் போராடும் உரிமையினையும் கருத்துரிமையினையும் அடக்கியொடுக்கும் செயற்பாடாகவே வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி ஜெனிற்ராவின் கைது நோக்கப்பட வேண்டியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக குரல் கொடுத்துவரும் இன்னபிற செயற்பாட்டாளர்கள், உறவினர்களை புலனாய்வுப்பிரிவினர் உள்ளிட்ட அரச படைகள் அச்சறுத்தும் போக்கும் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்ததே! இதுபோன்ற அப்பட்டமான சனநாயக மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசும் செயல்களில் ஈடுபடாமல், உளச்சுத்தியுடன் நிலையான நல்லிணக்கத்தினை எட்டுவதற்கு முயல வேண்டும். தமிழ் மக்களை ஓரவஞ்சனையுடன் வஞ்சித்து விட்டு நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களை மேற்கொள்வதென்பது 21ஆம் நூற்றாண்டில் நவீன வடிவில் அடிமைத்தனத்தை தமிழ் மக்கள் மீது திணிக்க முயல்வதாகும் – என்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கு.துவாரகன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் சோ.சிந்துஜன் ஆகியோரின் கையொப்பத்துடன் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது