நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் FORUM-ASIA அமைப்பு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
இந்த அமைப்பு 23 நாடுகளில் செயற்படும் 85 ஆசிய நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிராந்திய மனித உரிமைகள் அமைப்பாகும்.
சம்பந்தப்பட்ட சட்டமும் சட்டமூலமும் நாட்டு மக்களின் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவ்வமைப்பு கூறியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் உள்ள பயங்கரவாதத்தின் பரந்த வரையறை, வரையறுக்கப்பட்ட நீதித்துறை மேற்பார்வை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள்ள வரம்புகள் FORUM-ASIA-வின் கரிசனையை ஈர்த்துள்ளன.
தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிவில் சமூகத்தின் ஆட்சேபனைகளை மீறி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பல்வேறு வழிகளில் தணிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் சிபாரிசுகளை கருத்திற்கொள்ளாமல், தண்டனை வழங்குவதற்காக ஐவர் கொண்ட குழுவை நியமித்ததன் மூலம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறலின்மை வெளிப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சட்டங்களும் நிறைவேற்று அதிகாரத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்குவதாகவும், அரசியல் எதிர்ப்பாளர்களை கைது செய்யும் அபாயத்தை அதிகப்படுத்துவதாகவும் FORUM-ASIA வலியுறுத்தியுள்ளது.