மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (19) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் குறித்த கிராம மக்கள் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 8.30 மணி தொடக்கம் 9.30 மணி வரை குறித்த அமைதி போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கு,விசேட விசாரணை காவல்துறைக் குழுவை நியமி,சிறுவர்களை உயிர் போல் காப்போம்,இணையவழிப் பாலியல் துஸ்பிரயோகங்களை நிறுத்துங்கள்,எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை யும் அதே நேரம் சிறுமியின் புகைப்படத்தையும் ஏந்தியவாறு அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் காவல்துறை காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் சனிக்கிழமை(17) மதியம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மீண்டும் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில்முன்னிலைப் படுத்த உள்ள நிலையில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் குறித்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.