முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்று(01) கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட பூதவுடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு அதன் பின்னா் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படும் என சாந்தனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலை, அவரது உறவினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்றுள்ளனர்.
அவரது சடலம் இந்தியாவின் சென்னையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-122 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் பகல் 11.35 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டது.
சடலத்தை விடுவிப்பதற்கு தேவையான ஆவணங்கள் சில சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியிருந்ததனால் குறித்த ஆவணங்கள் கிடைக்கும் வரை, பிற்பகல் 03.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் சடலம் வைக்கப்பட்டிருந்ததுடன், ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது