யோகசுவாமிகளை நேரில் தரிசித்தவர்களும் கற்றும் கேட்டும் அறிந்தோர்களும் அவரைப்பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர். அவ்வெழுத்துக்கள் மண்ணில் நடமாடிய யோகசுவாமிகளைப் பற்றியே பெரும்பான்மையாகக் கூறின. யோகசுவாமிகளின் மானுடப் போர்வைக்குள் அவரின் உண்மைச் சிவசொரூபம் மறைந்திருந்தது. அதனைக் கண்டு எழுதும் ஆற்றல் படைத்தோர் எவரும் இருக்கவில்லை. இதனைக் குறித்தே சுவாமிகள் “எங்களைப் பற்றி எழுதக் கூடியவர்கள் இன்றும் இல்லை; இனி என்றும் வரப்போவதுமில்லை” எனக் கூறினர்.
ஆயின் யோகசுவாமிகள் தன்னைத் தன்னால் அறிந்தவர். அவர் தன்னை அறிந்து தெளிந்து உணர்ந்து அவ்வுண்மையில் உறுதியுற்றிருந்தவர் அவர். அந்த உண்மையில் தூண் போன்று இருந்தார். அவரால் தன்னைப் பற்றி எழுத முடியும் ஆனால் அந்தத் தன்னுண்மையிலே பேர் ஊர் இல்லை; பிறப்பு இறப்பு இல்லை; இளமை முதுமை இல்லை; போக்குவரவில்லை; காலதேசவர்த்தமானமில்லை; நீ நான் இல்லை; நல்லது கெட்டதில்லை; நேற்று இன்று நாளை என்பன இல்லை; ஆதலால் இவற்றைப் புனைந்து எழுதும் சரிதம் என்பதும் அவருக்கு இல்லை. சரிதம் இல்லை எனினும் அவர் “திரம் இது பொருள்” எனும் உண்மையில் திடம்பெற நின்றார். அதில் அவர் குன்று போல் நின்றார். நின்ற நிலையிற் பிரியாதிருந்தார். அந்தத் திரத்தன்மை அவரது திருவாய்மொழிகளில் தெளிவாகத் தெரிகிறது. அத்திரத்தன்மையில் மூன்று இயல்புகளைக் கண்டறிய முடிகிறது. அவற்றுள் ஒன்று அவர் தானாய் எங்குஞ்சென்றிருந்தார் என்பது. எங்கும் சென்றிந்திருந்தவரெரினும் ஏதொன்றிலும் தட்டாது முட்டாதிருந்தார் என்பது இன்னொன்று. எல்லாவற்றுக்கும் அப்பால் தானே தானாய்த் தனியே சுகமாய் இருந்தார் என்பது மூன்றாவதான முடிந்ததில்லை.
“தன்னைத் தன்னால் அறிந்திட வேண்டுமே தானாய் எங்கும் செறிந்திட வேண்டுமே” என அவர் தனது குருவிடம் வேண்டுவதான ஒரு வாசகம் நற்சிந்தனையில் உளது. இவ்வேண்டுதல் பலித்ததென்பதில் ஐயமில்லை. அவர் எங்கும் செறிந்த தன் உண்மையை அறிந்திருந்தார். அந்த ஞான விசரில்” அங்கும் இங்கும் எங்கும் நான் அதை அறியும் விசரன் நான்” என அவர் பாடுகின்றார். மேலும்
எல்லாரிடத்தும் அடியேன் வாழ்வேன்
எல்லாரிடத்தும் அடியேன் தாழ்வேன்
எல்லார்க்கும் என்றும் அடியேன் கேள்வன்
சொல்லாற் பயனிலை என்றே சூழ்வன்
எல்லாருவமும் என்னுருவாகும்
எல்லார் நலன்களும் என் நலமாகும்
எல்லார் பலமும் என்பலமாகும்
நல்லோர் என்னுரை நயந்து கொள்வாரே
என்பது சுவாமிகளின் நல்லுரை. விளக்கமாகக் கூறப்பெற்றிருக்கும் சுவாமிகளின் இந்த நல்லுரை எல்லோராலும் அறிதற்குரியதொன்றன்று. நல்லோர் மாத்திரமே இதனை அறிந்து நயக்க வல்லவராவர். எங்கள் ஆசான் அருள்மொழிகளில் ஓரிடத்தில் “எல்லாருள்ளும் நான் இருக்கிறேன் என்பதை எல்லோராலும் விளங்க முடியாது. என்று சுவாமிகள் கூறியிருக்கிறார். இதனை எல்லோரும் விளங்கும் வண்ணம்” இப்பொழுது நான் எங்கும் இருக்கிறேன் என்பது தெளிவு: ஆயினும் இப்படி ஒரு குடிசையில் இந்த உடலை வைத்திருக்க வேண்டியதே” என்ற வண்ணம் அவர் கூறியது முண்டு. அவரது மானுடப் போர்வை கொழும்புத்துறைக் கொட்டிலில் உறைந்தது: உண்மையான அவரோ “எங்கும் என்றன் தங்கும் வீடு” என்று எங்கும் செறிந்திருந்தார். எங்கும் செறிந்த ஆனந்தக்களிப்பில் அவர் பாடிய பாடலொன்றில்
எல்லாம் என் கைவசமாச்சே – சிவசிவ
எடுத்த பிறப்பின் பயன் சித்தியாச்சே
உல்லாசமாய்த் திரிய லாச்சே
உலகெல்லாம் எனக் குறவாகிப் போச்சே
எனப் பாடுகின்றார். மண்ணுலகில் மாத்திரமன்றி விண்ணுலகிலும் அவர் செறிந்திருந்தார். அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் தமது அகத்திலே தரிசித்துக் கொண்டிருந்தார். “என்னையன்றி வேறொன்றுமில்லை” என்று சொல்லும் வண்ணமாக மண்ணும் விண்ணும் அல்லும் பகலும் அதுவும் இதுவும் சொல்லும் பொருளும் என எல்லாவற்றிலும் செறிந்திருந்தார். எங்கும் செறிந்திருந்ததுடன் எல்லாவற்றையும் ஆளவல்லவராயுமிருந்தார். அவர் “தேவாதிதேவரெல்லாம் செய்வார் பணிவந்து” அதிர வரும் நமனும் அஞ்சியே பணிசெய்யும் எனவும் பாடியிருக்கிறார். அவர் “நீயே உலகத்துக்கு ஏகசக்கராதிபதி” என்று உபதேசித்த போது தாம் அவ்வாறிருக்கும் தன்மையினாலேயே அதனை உறுதியாகக் கூறினார்.
சுவாமிகள் விண்ணும் மண்ணுமாகி நின்ற போதும், அவனியெல்லாம் ஆள்பவராயிருந்தபோதும், ஈதொன்றிலும் தட்டாது முட்டாது ஏதுமொன்றற நிற்பவராய் இருந்தார். அவர் உடம்போடிருந்தபோதும் உடலுபாதைகளால் தாக்குப்படாதவராயிருந்தார். உலகில் வாழ்ந்த போதும் உலகின் நன்மை தீமை அறியாதவராயிருந்தார். “இந்த உலகையும் உடலையும் மெய்யென நம்பி வாழ்பவர்கள் நீங்கள்; நான் இந்த உடலையும் உலகையும் பொய்யெனத் துணிந்து பொருந்திய வண்ணம் வாழ்கிறேன்” என்ற வண்ணம் அவர் எழுதியிருக்கிறார். “வெப்பம் தட்பம், இளமை, முதுமை இயற்கையின் குணங்கள் இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்? இவைகள் தோன்றி மறைவன நாமோ தோன்றுவதுமில்லை; மறைவதுமில்லை உண்மை இன்மையாகாது: இன்மை உண்மையாகாது” என்ற உண்மையில் உறைத்து நின்றவர் அவர். அவர் சாதிசமயம் என்னும் சங்கடத்துக்குள்ளாகாதவர்; “பஞ்சம் படைவந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி” யென்றும் “பரிதிகாயில் வாடாது; பவனம் வீசில் வீழாது பரவை சூழில் ஆழாது” என்றும் அவரது திருவாய் மொழிகள் உள்ளன.
தானாய் எங்கும் செறிந்திருத்தல் சுவாமிகளது ஒருநிலை. எங்கும் நீக்கமற நிறைந்து நின்றபோதும் யாதொன்றிலும் தட்டாது, முட்டாது, தாக்குறாதிருத்தல் சுவாமிகளின் இன்னொரு நலம். இவற்றினும் மேலான உயர்வற உயர்ந்த நலத்தினராகவும் சுவாமிகள் உள்ளார். இவ்வுயர்நலத்தைச் சுவாமிகள்
முண்டகமலர்ப்பதம் கண்டேன்
மூவருந் தேவரும் முளைத்ததும் கண்டேன்.
உருகி உருகி உணர்ந்தேன் – சிவ சிவ
ஒன்றையும் காணாது நின்றேன்
மருமமிது பெரும் மருமம்
மகத்துக்களாலும் சொல்லொணா மருமம்
எனப்பாடுகிறார்.
இவ்வாறு பாடும் அவர் தமது குரு மாதவரும் அறியாத மகத்தானாக நின்றது போலவே தாமும் நின்றார். அவர் முண்டக பலர்ப்பதம் கண்ட திறத்தைப் “பாதாரவிந்தம் பரவிக்கண்டேனே என்றும் பாடுவார். கண்ட திறத்தைக் கண்டபத்து” எனும் பதிகத்தில் விரிவாகப் பாடி இறுதிப்பாடலில்
இரவு பகலற்ற ஏகாந்தவீட்டில் எனைப்
பரவிப் பணியவைத்தபரமன் குருவாகிச்
சரணகமலமலர் தலைதனிலே வைத்தவனைக்
குரவு மலர் குறையாக் குளிர் நல்லை கண்டேனே
எனப் பாடிப்பரவுகிறார்.
இப்பாடலிலே பரம்பொருளே குருவாக வந்து பாதமலரை யோகரின் சிரசில் சூட்டி ஏகாந்த வீட்டில் பரவிப் பணிந்திருக்கச் செய்தமையைக் காணக் கூடியதாகிறது. இந்த ஏகாந்த வீடு ஓங்காரமேடையின் மேல் இருக்கின்றது. இவ்வீட்டின் பள்ளியறையிலே நீங்காச் சிவகதியில் அவர் நிலைத்திருந்ததை
ஓங்காரக் கம்பத்தின் உன்னத மேடையில்
பாங்கான வீட்டுப் பள்ளியறையில்
தூங்காத திறவுகோல் கொண்டுதிறந்தால்
நீங்காச் சிவகதி நிச்சயமாமே
என அவர் திடம்படக்கூறுகிறார்.
அவர் பட்டப்பகல் போல் ஒளிரும் வெட்டவெளி ஒன்றையே காண்கிறார். அவ்வெளி “செஞ்சரண (திருவடி) நிலவு விரிந்திருப்பதால் விளைந்தது. நிலவொளி போன்று குளிர் செய்வதாயிருப்பது. இந்த தண்ணென்ற சாந்த பத நிலையில் திருவடியின் செய்யநடம் கண்டு களிப்பவராகவும் துய்ய அறிதுயில் புரிபவராகவும் உள்ளார். “எங்கள் வளநாடு” என்னும் பாடலில் இவற்றை விரிவாக விவரணஞ் செய்கிறார். இந்த வளநாட்டைக் கட்டு நமன் கிட்டுவதில்லை. கன்று மன வெப்பில்லை. துன்பக்களை இல்லை. இன்பப்பயிர் ஓங்கி வளர்கிறது. தேடித்தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே என்ற இனிய கீதத்தில் யோக சுவாமிகளது உயர் நலம் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இக்கீதத்திலே அவர்,
சிந்தையிற் கண்டே என் தீவின் போச்சுது
சிவபெருமான் தன் இணையடி வாய்த்தது
எனத் தான்பெற்ற பெரும் பேற்றைப் பாடுகிறார்.
இவற்றைப் போன்று தனது உயர்வற உயர்ந்த நிலையை நற்சிந்தனையில் பாடியிருக்கின்றார். இவற்றில் சரிதம் இல்லை; திரம் உண்டு.
– சிவதொண்டன் சபையினர், யாழ்ப்பாணம்.