ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் நாடெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கவே முடியாது. அதனைச் செய்வதாயின் அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம். அதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதி அவசியம்.
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் தேவை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கிடையில் அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் மக்கள் வன்முறையற்ற அமைதிப் போராட்டத்தில் இறங்குவார்கள்.
“நானும் முதலில் சட்டத்தை நாடுவேன். அதன் பின்னர் போராட்டம் செய்வேன். எனவே, அப்படியான முயற்சி இடம்பெறாது என்றே தோன்றுகின்றது. அதேவேளை, நான் அரசியல் செய்வேன். ஆனால், தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டேன். ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அல்ல பிரதேச சபை தேர்தலில்கூட போட்டியிட மாட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்ததுடன், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களுக்கு கட்டளையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.