தமிழ் பொது வேட்பாளரை தேடி பிடிப்பதற்குள் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், வடமாகாண அவைத்தலைவருமான சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி ஒரு முடிவிற்கு வரவில்லை. ஆனால் தனிப்பட்ட வகையில் என்னைப் பொறுத்தவரையில் தமிழ் பொது வேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.
எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய பொது வேட்பாளரை தேடிப் பிடிபதற்குள்ளேயே முரண்பாடு பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித் தான் இருக்கிறது.
எனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தரப்புடன் நாம் பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாக பலமாக நாங்கள் இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு பொது வேட்பாளர் என்றால் ஏனைய வேட்பாளர்களோடு நாங்கள் சமநிலையில் நிற்கிற பொழுது சில சமயங்களில் எங்களது பேரம் பேசும் பலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் எங்களடு பேரம் பேசாமலும் போகலாம்.
அத்துடன் தமிழ் பொது வேட்பாளர் தெரிவு பிரதேச வாதங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய வாய்ப்பாகவும் அமையும் என மேலும் தெரிவித்தார்.