Home இலங்கை யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு!

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு!

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது.

அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.

‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது.

கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.

சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.

‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது.

திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.

‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார்.

இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More