வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக தேசிய பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறிப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.
இதே போன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கின்றர். அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும். எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது.
இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ள இந்த பாடசாலைகளின் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தாம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
தேர்தல் வருகின்றதால் தமக்கான ஆதரவை பெருகி கொள்வதற்கே அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கின்றனர். இதனை நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கூறிய போது, நிறுத்துவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறு நியமனங்கள் மட்டுமல்ல சில முறையான இடமாற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் கல்வியில் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தாம் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முழு இலங்கையிலும் இருக்கின்ற சுற்றறிக்கை வடமாகாணத்தில் பல சந்தர்ப்பங்கள் பல இடங்களில் ஆசிரியர்கள் விடயத்தில் மீறப்பட்டு வருகிறது. ஆகவே சுற்றறிக்கையை மீறி செயற்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மேலும் இந்த வருடம் மே தினத்தை யாழ்ப்பாணத்தில் செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறதுது. இதில் விசேஷமாக அதிபர், ஆசிரியர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் மட்டுமில்லாமல், இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற அடக்குமுறை சட்டங்கள் பேச்சுரிமை தொழிலுரிமை பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டக்களுக்கு எதிராகவும் அனைவரதும் உரிமைகளை வலியுறுத்தி இதனை செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.