இலங்கையின் மரபு ரீதியான பண்பாட்டு வழக்காறுகளில் ஒன்றே கதிர்காமப் பாத யாத்திரையாகும். இது இலங்கை மக்களின் வரலாறு, பண்பாடு தொடர்பிலான ஒரு மரபுரிமையாகும். வருடந்தோறும் கதிர்காமக் கந்தனின் அருள் வேண்டி சாரைசாரையாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களுடனும், நேர்த்திக்கடன்களுடனும் தங்களது யாத்திரையை மேற்கொள்வது வழக்கம்.
உள்ளூர்த் தெய்வங்களான கந்தனோடும் வள்ளியோடும் தொடர்புபட்ட கதிர்காமப் பாத யாத்திரையானது காட்டு வழிப் பாதையெங்கிலும் உள்ளூர்த் தெய்வங்களை வழிபாடு செய்து இறுதியாகக் கதிர்காமக் கந்தனை தரிசிப்பதாகும்.
மாரி, கண்ணகி, வேலன்(முருகன், கந்தன்), வீரவள், பத்தினி வயிரவர், காளி எனப் பல உள்ளூர்த் தெய்வங்களைக் குலதெய்வங்களாக வழிபடுவோர் தங்களது கடமைகளில் ஒன்றாகவும், தங்களது மரபுரிமைகளில் ஒன்றாகவும் இக்கதிர்காம யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
சந்ததி சந்ததியாக தங்களது பெற்றோர்களுடன் சிறுவர்களாக நடக்கத் தொடங்கிய பெண்களும் ஆண்களும் தங்களது மகள்மார்-மகன்மார், பேரன்மார்-பேத்திமார், கொள்ளுப்பேரன்மார்- கொள்ளுப்பேத்திமார் என காலங்காலமாக பாத யாத்திரையை மானசீகமாக மேற்கொள்கின்றமையானது ஒரு உரிமை சார் வழக்காறாகத் தொடர்கின்றது .
இவ் யாத்திரையின்போது காட்டு வழி நெடுகிலும், ஆன்மிகப் பலமும், மன அமைதியும், நிம்மதியும், ஒற்றுமையும், பாரபட்சமின்மையும் அளவில்லாமல் கிடைப்பது யாத்திரை செல்வோராக நாம் யாவரும் உணர்ந்தறிந்ததே.
வயது, பால்நிலை, வெளித்தோற்றம் போன்ற எவ்வித பாராபட்சங்களுமற்ற, ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளிக்காத, அனைவரும் சமத்துவம் என்பதை வெளிப்படுத்தும் களமாகவே இப்பாத யாத்திரை காலங்காலமாகத் தொடர்ந்து வருகின்றது.
அந்தவகையில் பல்தன்மையினைக் கொண்ட யாத்திரையில் ஒற்றைத் தன்மையான பாராபட்சமிக்க சில விடயங்களை முன்வைப்பது, நாம் வணங்கும் தெய்வம் எம்மிடத்தில் காட்டாத பாரபட்சங்களை எங்களுடன் வாழும் ஏனைய சக மனிதருக்கு நாம் காட்டுவது போலாகும்.
கதிர்காமப் பாத யாத்திரை அனைவருக்குமானது. கந்தன் – வள்ளியின் ஆசியும், அருளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டியது. எனவே பாராபட்சங்களற்ற யாத்திரையாக கதிர்காம யாத்திரை அமைய அனைவரும் இணைவோம்! கந்தன் – வள்ளி ஆசி அருள் பெறுவோம்!
நிறோசினி. ம