கதிர்காமத்திற்கான நீண்டதூரக் கால்நடைப் பயணம் என்பது இலங்கைக்கேயுரிய பழங்குடிகளின் பண்பாடுகளுடன் தொடர்புடைய வரலாற்றுத் தொடர்ச்சியைக் காட்டும் மரபுரிமைப் பயணங்களுள் ஒன்றாக இன்றுவரை விளங்கி வருகின்றது.
இலங்கைத் தீவின் கரையோரப் பகுதிகளிலும் உள்ளகப் பகுதிகளிலும் வாழ்ந்த பழங்குடி மக்களில் ஒரு தொகுதியினர் வடபுலத்தின் நந்திக்கடலோரம் வைகாசித் திங்களில் ஒன்றிணைந்து அங்கிருந்து கிழக்கின் கரையோர வழிப்பாடுகளினூடாகக் கால்நடையாக நடந்து, நடந்து நிறைவாக மாணிக்க கங்கையின் கதிர்காமத்தைச் சென்றடைந்து அங்கே ஒன்று சேர்ந்து தமது குலதெய்வத்தைக் கொண்டாடி மகிழ்ந்த பெரும் விழாவாக கதிர்காமத்திற்கான கால்நடைப் பயணம் ஆரம்பத்தில் இருந்துள்ளது என்பதை வாய்மொழி வரலாற்றுக் கதைகள் வழியாக அறிகின்றோம்.
வரலாற்று ஓட்டத்தில் இலங்கைத்தீவில் ஏற்பட்ட பல்வகைப் பண்பாடுகளின் இணைவு, கரைவு, செல்வாக்கு மற்றும் பௌதீக அமைப்பில் உருவான மாற்றங்கள் என்பவற்றின் மத்தியிலும் கதிர்காமத்திற்கான கால்நடைப் பயணம் அதன் தொடர்ச்சியை இழக்கவில்லை மாறாக இலங்கைத்தீவின் பழங்குடிப் பண்பாட்டின் தொடர்ச்சியாக மேலும் வலிமை பெற்று வந்துள்ளது.
இதனால்; தொட்டுணரக்கூடிய, தொட்டுணர முடியாத பல்வேறு அம்சங்களைக் கொண்ட மரபுரிமைப் பயணங்களுள் ஒன்றாக கதிர்காமத்திற்கான கால்நடைப் பயணம் நவீன காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வரலாற்றில் கதிர்காமத்திற்கான கால்நடைப் பயணம் மக்கள் குடியிருப்புகளிலும், காட்டுப் பகுதிகளிலும் பல்வேறு தெய்வங்களுக்கான வழிபாட்டு மரபுகளையும், பண்பாடுகளையும் உருவாக்கி வளர்த்துச் சென்றுள்ளமை பற்றியும் ஆய்ந்தறிய முடிகிறது.
குடும்பங்களாகவும், சமூகங்களாகவும், ஊரவராகவும், தனியாளாகவும், இன, மத, வயது, பால், பருவ வேறுபாடுகளைக் கடந்து நம்பிக்கை, பக்தி, வேண்டுதலும் வேண்டுதலுக்கான நிறைவேற்றலும், தெய்வத் தொண்டு, முன்னோரின் கடமைகளைத் தொடருதல், கூட்டுறவு, உளநலம், உடல்நலம் எனப்பல்வேறு ஆக்கபூர்வமான நோக்கங்களுடன் கதிர்காமத்திற்கான கால்நடைப் பயணம் நடைபெற்று வருகின்றது.
கால்நடைப் பயணத்தின் போது முருகன் சிறுவனாகவும், இளைஞனாகவும், வயோதிகனாகவும் வந்த, வருகின்ற கதைகளும், வள்ளி சிறுமியாகவும், யுவதியாகவும், அம்மாவாகவும், மூத்த தாயாகவும் காட்சி கொடுத்த, கொடுக்கும் கதைகளும் கதிர்காமத்திற்கான நடைப் பயணம் வயது வேறுபாடுகளைக் கடந்து எல்லோருக்கும் பொதுவான மரபுரிமைப் பயணம் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது எனலாம்.
கதிர்காமத்திற்கு நடக்கத் தொடங்கி விட்டால் ஒவ்வொருத்தரும் தத்தமது தனிப்பட்ட அடையாளங்களைக் கடந்து சாமியாகவே பார்க்கப்படும் பொதுத்தன்மை இப்பயணம் எல்லோருக்குமானது, வரையறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றது.
இன்றைய அதிநவீன காலத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பத்திற்குள் கட்டுண்டு நுகர்வுப் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழலில் வளரும் ஒவ்வொரு மனிதர்களும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வாழ்வதற்கான அனுபவங்களையும், ஆற்றல்களையும் ஆளுமையினையும் வழங்கவல்ல மரபுரிமைப் பயணங்களுள் ஒன்றாகக் கதிர்காமத்திற்கான நடைப்பணயமும் அமைந்துள்ளது என்ற செய்தியும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.
து.கௌரீஸ்வரன்,