மன்னார்-பேசாலை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 7 பேர் இன்று சனிக்கிழமை(18) மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மற்றும் பேசாலை காவல்துறையினர் இணைந்து இன்று மாலை 4 மணியளவில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது ,புதையல் தோண்டும் உபகரணங்களுடன் 7 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை அதிகாரி என தெரிய வந்துள்ளது.ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் ஸ்கேனர் இயந்திரம்,மந்திரப் பொருட்கள் ஆகியவையும் மீட்கப்பட்டு பேசாலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பேசாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.