ஏப்ரல் மாதம் முடிய கதிர்காம யாத்திரை பற்றி பேசத் தொடங்கியாகி விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கலண்டர் தாள் பிரட்டி கணக்கெடுப்பு நடக்கிறது. எப்பொழுது கொடியேறுகிறது….தீர்த்தம் எப்போது..பெண்கள் இதில் ஆண்களை விட அதிகமாக அக்கறை கொண்டுள்ளதை காணும்போது மிக மிக மகிழ்ச்சி. தங்கள் வீட்டுப் பொறுப்புகளை எப்படி யாரிடம் விடுவது? பிள்ளைகளின் பரீட்சைகள் வருகிறதா, பாடசாலை நாட்கள் வருகிறதா…எப்படி படிப்பு குழம்பாமல் அதனை கையாள்வது…விடுபட்ட பாடங்களை எப்படி அவர்களுக்கு படிப்பிப்பது. பெண்கள் எதனையும் முற்கூட்டியே தீர்மானித்து திட்டமிடுபவர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு எதுவும் தளம்பப் போவதில்லை.
பிள்ளைகளும் நாட்களை எண்ணத் தொடங்கி விட்டார்கள். பெண்கள் வீட்டில் இருக்கும் பிராணிகள், வயது போனவர்கள் அனைவருக்கும் ஆன பொறுப்புகளை தீர்மானிக்க தொடங்க ஆண்கள் தங்களுக்கான ஒரு சேட், குளிக்க ஒரு சாறன், காவி வேட்டி, இசைக்கு சில கருவிகள் என எடுக்க பெண்கள் இலகுவாக தூக்கக்கூடிய சமையல் பாத்திரங்கள், பழுதாகாமல் வைத்திருந்து சமைக்கக் கூடிய உணவுகள், மருந்துகள், ஓய்வு நேரத்தில் பிள்ளைகளுடன் பாடக்கூடிய பக்தி பாடல்கள் என சேர்ப்பதில் பரபரப்பாகி விடுவார்கள்.
வீட்டுப் பொறுப்புகளை சிலவேளை பெண்களால் பொறுப்புக் கொடுக்க முடிவதில்லை. இத்தருணங்களில் அவர்கள் கவலையுடன் வீட்டிலேயே இருந்து விடுவார்கள். எனினும் குடும்பத்திற்காக நடப்பது என அவர்களது நேத்திக் கடன்கள் அதிகமாக இருக்கும். ஆகவே வளர்ந்த ஆண்கள் செய்ய வேண்டியது, பெண்கள் அனைவருக்காகவும் நேத்திக் கடன் வைத்து நடப்பதால், பெண்களது இப்பொறுப்புக்களை தாம் வீட்டில் இருந்து எடுப்பதும் பெண்களை யாத்திரைக்கு செல்ல உதவி புரிவதும் ஆகும். இது மிகுந்த புண்ணியமாகும்.
யாத்திரை பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் அது ஒரு தியானம். எத்தனை நேத்திக்கடன், கையில் முதுகில், தோளில் சுமையுடன் இளம் பெண்கள் உட்பட சிறுவர்களும் சேர்ந்து நடப்பதை பார்க்கும்போது யாத்திரையின் மகிமை தெரிகிறது.
பொதுவாகவே இளம் பெண்கள் வெளியில், பொது இடத்தில் குளித்தல் சாப்பிடுதல், தமது அன்றாட கடமைகளை முடிப்பது மிக மிக குறைவு. எனினும் இந்த யாத்திரை நேரத்தில் என்ன அதிசயம் அனைவரும் மனிதராகி மனதில் எவ்வித சலனமுமின்றி வாழும் அந்த நாட்கள். ‘சாமி’ எனும் ஒற்றைச் சொல்லுக்கு உரிய மகிமையை யாத்திரையின் போதே உணரலாம். அன்பு, கருணை, இரக்கம், ஒத்துழைப்பு, பரிவு அத்தனையும் அந்த ‘சாமி’ எனும் ஒற்றைச் சொல்லுக்குள் வாழ்வதையும் ஆண், பெண், சிறுவர், குழந்தை, வயோதிபர் அனைவரும் ‘சாமி’ யேதான். இறைவன் எங்கும் இல்லை அவன் உனக்குள்தான் எனும் நமது பெரியார்களின் வாக்கு நிஜமாக நடப்பதை நாம் யாத்திரையின் போதே காண்கிறோம்.
முக்கியமாக இளம் பெண்கள் போன்று சிறுவர்களுக்கும் இது முக்கியமானதாகும். எத்தனையோ புத்தகங்களில் மனிதம் பற்றியோ, ஒழுக்கம் பற்றியோ அவர்கள் படிக்கலாம். அத்தனையும் சித்தி அடைந்தவுடன் முத்தி பெற்றுவிடும் . ஏட்டுச் சுரக்காய் போன்று. எனினும் இங்கு இவர்கள் காணும் இந்த அனுபவப் பாடம் என்றென்றும் அழிவதில்லை. ‘இன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள்’ ஆகவே வன்முறையற்ற சமூகம் எமக்கு தேவை எனில் மேடைகள், புத்தகங்கள், அறிஞர்கள் மாநாடுகள், பல் சமய ஒன்றிய மாநாடு தேவையில்லை. ‘யாத்திரை’ , ‘சாமி’ எனும் உயிருள்ள கானகத்தில் அவர்கள் ஒரு வாரம் உலாவரட்டும். அன்பு கருணை, தாய், அனைத்தையும் பரிபூரணமாக அனுபவித்து நாளைய மனிதராய் மீண்டு வருவார்கள். அன்பு ஒன்றே பலமாய் பெண்கள் அவர்களுடன் இருப்பார்கள் அங்கும்.
– விஜயலட்சுமி சேகர்.