தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசியலில் ஒரு உத்வேகத்தை-momentum-தோற்றுவித்திருக்கிறது என்று கொழும்புமைய ஊடகம் ஒன்றில் ஆசிரியராக இருந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அதனால்தான் பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்களைத் திரட்டுபவர்கள் அதிகம் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் காணப்படுகிறார்கள்.அதில் பல கருத்துக்கள் தர்க்கபூர்வமானவை அல்ல.
தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதை எதிர்ப்பவர்களை எந்த அளவுக்கு தற்காப்பு நிலைக்குத் தூண்டியிருக்கிறது என்பதற்கு கடந்த வாரம் வெளிவந்த ஒரு செய்தி நல்ல எடுத்துக்காட்டு.அச்செய்தியில் சம்பந்தர் ஒஸ்லோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஆவணத்தை முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கிறார்.13 சக, எக்கிய ராஜ்ய என்றெல்லாம் உரையாடப்பட்ட ஓர் அரசியல் பரப்பில், இப்பொழுது ஓஸ்லோ ஆவணத்தை முன்னிறுத்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை பொது வேட்பாளர் என்ற தெரிவு ஏற்படுத்தியிருக்கின்றதா?
கடந்த 15 ஆண்டுகளாக ஏன் அந்த ஆவணத்தை முன்வைத்து உரையாடப்படவில்லை?அதைவிட முக்கியமாக அந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்துத்தான் 2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தயாரிக்கப்பட்டதா ?
முதலில் அந்த ஒஸ்லோ ஆவணத்தைப் பார்க்கலாம்.அது ஒரு பிரகடனம் அல்ல. ஆங்கிலத்தில் Oslo communique என்றுதான் காணப்படுகின்றது. தமிழில் அதனை நிலைப்பாட்டு ஆவணம் என்று கூறலாம்.அதில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன.அந்த நிலைப்பாடு பின்வருமாறு…”உள்ளக சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு,தமது வரலாற்று ரீதியிலான,பாரம்பரிய வாழ்விடத்தில், ஐக்கிய இலங்கைக்குள்,சமஸ்ரி அடிப்படையிலான தீர்வு தொடர்பாக இரு ஆராய இரு தரப்பும் உடன்படுகின்றன.”
அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்ரி அடிப்படையிலான ஒரு தீர்வை ஆழமாக ஆராய்வது என்றுதான் அங்கு கூறப்பட்டிருக்கிறது.அதே சமயம் அந்த உடன்பாடு எத்தகைய ஓர் அரசியல் சூழலில் எட்டப்பட்டது?அது நோர்வையின் அனுசரணையோடு இணைத்தலைமை நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி.அதாவது மூன்றாவது தரப்பு ஒன்றின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு சமாதான முயற்சி.
இது மிக முக்கியமானது. இலங்கையின் இனப்பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை அல்ல.அது ஓர் அனைத்துலகப் பிரச்சினை.உலகில் உள்ள எல்லாத் தேசிய இனப்பிரச்சனைகளும் சாராம்சத்தில்,அனைத்துலகப் பிரச்சனைகள்தான்.உள்நாட்டு பிரச்சினை ஒன்றில் வெளிநாடுகள் தலையிடும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்க்கும் வளர்ச்சிகளைப் பெறுகின்றன.எனவே தேசிய இனப்பிரச்சனைகள் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான்.அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுகள்தான் உண்டு.உள்நாட்டுத் தீர்வுகள் கிடையாது.
திம்புவில் தொடங்கி ஒஸ்லோ வரையிலும் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 15ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் அதைத்தான் நிரூபிக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனைக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீட்டோடு அந்த தீர்வு உருவாக்கப்பட வேண்டும்.
எனவே ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை அதன் அனைத்துலகப் பரிமாணத்துக்குள் வைத்து முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.அந்த அடிப்படையில் பார்த்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பின் கீழ் ஓர் உடன்படிக்கைக்கு வர எந்த ஜனாதிபதி வேட்பாளர் தயார்?அவ்வாறு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளராவது தயாராக இருந்தால், ஒரு பொது வேட்பாளருக்கான தேவை இருக்குமா?
எனவே பொது வேட்பாளர் என்ற தெரிவுக்கு எதிராக ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை முன்வைப்பவர்கள் அந்த விடயத்தில் தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான வேட்பாளர்களில் யார் ஒரு மூன்றாவது தரப்பின் மேற்பார்வையில் தமிழ் மக்களோடு உடன்பாட்டுக்கு வரத் தயார்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த மே தினத்தில் கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றியதுபோல,தமிழ் மக்களோடு அப்படி ஓர் உடன்படிக்கைக்கு வரக்கூடிய தென்னிலங்கை வேட்பாளர் தமிழ்மக்கள் மத்தியில் 100வாக்குகளை பெறலாம்.ஆனால் தென்னிலங்கையில் அவர் ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம்.15ஆண்டுகளின் பின்னரும் அதுதான் இலங்கைத்தீவின் இன யதார்த்தமாக உள்ளது என்பது எத்துணை குரூரமானது?
தமிழ் மக்களோடு மிகச்சாதாரண அடிப்படைகளில் ஓர் உடன்படிக்கைக்கு வரக் கூட எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் தயாராக இல்லை.இப்போதுள்ள ஜனாதிபதிதான் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் உருவாக்கப்படுகையில் பிரதமராக இருந்தவர்.அவர் இப்பொழுது என்ன கூறுகிறார்? இனப்பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாகத் தந்திரமாகக் குறுக்குகிறார். இப்பொழுது பொருளாதார நெருக்கடிக்குத்தான் தீர்வு தேவை என்று சூசகமாகக் கூறுகிறார்.எல்லாவற்றையும் விட முக்கியமாக போலீஸ் அதிகாரம் இல்லாத ஒரு 13ஐத்தரலாம் என்று கூறுகிறார்.அதாவது 13மைனஸ்.மற்றவர் சஜித் பிரேமதாச.அவர் 13பிளஸ் என்று கூறுகிறார்.ஒரு தீர்வை முன்வைத்து மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் ஒரு பன்னாட்டு உடன்படிக்கைக்கு வர அவர் தயாரா?மூன்றாவது அனுரகுமார.அவர் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என்பதை இதுவரை துலக்கமான வார்த்தைகளில் தெரிவிக்கவில்லை.
எனவே மேற்சொன்ன மூன்று வேட்பாளர்களில் யாருமே தமிழ்மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் மேற்பார்வையின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கப்போவதில்லை.இப்படிப்பட்டதோர் பின்னணியில் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவரோடு ஏதோ ஒரு உடன்பாட்டுக்கு வரலாம் என்று கருதும் தரப்புக்கள் தமிழ்மக்களுக்குப் பின்வரும் விடையங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு பிரதான வேட்பாளராவது தமிழ் மக்களோடு மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடன்பாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறாரா?அது ஓஸ்லோ ஆவணத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்குமா?அல்லது 2015-2018 வரையிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபில் காணப்படும்”எக்கிய ராஜ்ஜிய”என்ற தீர்வா?
இவற்றுடன் மேலும் ஒரு கேள்வியை கேட்கலாம். கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ்த் தரப்பின் ஆதரவைப் பெற்ற ஒரே ஒரு வேட்பாளர்-மைத்திரிபால சிறிசேனதான்-வெற்றி பெற்றார். அவர் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின்படி,நிலைமாறு கால நீதியை நிலைநாட்ட,அதாவது பொறுப்புக் கூறலுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு புதிய யாப்பை உருவாக்கும் நோக்கத்தோடு நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது.2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் புதிய யாப்பு ஒன்றுக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் அந்த இடைக்கால வரைபின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனைக் காட்டிக்கொடுத்தார்.ஒரு யாப்புச் சதி முயற்சி மூலம் அவர் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார். இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய மிக அரிதான ஒரு மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்தார்.அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றதால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்தார்.
நல்லாட்சிக் காலத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டன,கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது.ஆனால் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான சுமார் 10 ஆண்டுகால வளர்ச்சியில் அவை இயல்பாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள்தான்.ஆனால்,மைத்திரியுடனான சமாதானத்தின் இதயம் என்று கூறத்தக்கது, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிதான். ஆனால் அதைத் தோற்கடித்ததே அவர்தான்.இவ்வாறான ஏமாற்றுகரமான 15 ஆண்டுகளின் பின்னணியில்,தமிழ்த்தரப்பின் ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக வந்த ஒருவர் மைத்திரியைப்போல மஹிந்தவின் வீட்டில் அப்பம் சாப்பிட்டு விட்டு தலைகீழாக நிற்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
மேற்படி கேள்விகளுக்கு பொது வேட்பாளரை எதிர்க்கும் தரப்புகள் தெளிவான விடைகளை வழங்க வேண்டும்.கடந்த 15 ஆண்டுகளிலும் நடந்த எந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையிலும் தொட்டுக்கூடப் பார்க்கப்படாத ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தை இப்பொழுது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய தேவை என்ன?
அதைக் குறித்து உரையாட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அதுபற்றி உரையாடப்படவில்லை.தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தோடு அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக 2018-2021வரையிலுமான காலகட்டத்தை குறிப்பிடலாம்.2015-2018 வரையிலும் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.இதன்போது தமிழ்க்கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் அமைப்புகளும் வெவ்வேறு தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன.தவிர,தமிழ் மக்களிடமும் அது தொடர்பாகக் கருத்து அறியப்பட்டது.அந்த யாப்புருவாக்க முயற்சியைத்தான் மைத்திரி குழப்பினார்.
அதன் பின் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். தமிழ்த் தரப்பு அங்கேயும் யோசனைகளை முன் வைத்தது. இவ்வாறாக நவீன தமிழ் வரலாற்றில் தமிழ் மக்கள் அதிகளவு தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்த அக்காலகட்டத்தில் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தைக் குறித்து யாரும் உரையாடவில்லை.இப்பொழுது மட்டும் ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக ஏன் அந்த ஆவணம் தூசு தட்டி எடுக்கப்பட்டிருக்கிறது? விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஒரு நிலைப்பாட்டு ஆவணத்தை முன்னிறுத்தினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைப் பலவீனப்படுத்தலாம் என்று சிந்திக்கப்படுகின்றதா?
ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவை முன்வைக்கும் சிவில் சமூகங்கள்,தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரையும் தாம் நம்பவில்லை என்றுதான் கூறுகின்றன.ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் என்ற அடிப்படையில் அவை நிராகரிக்கின்றன.இது ஏறக்குறைய தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு சமாந்தரமானது.
சிவில் சமூகங்களைப் பொறுத்தவரை,தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடு.தமிழ் மக்களை ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பதற்கான ஆகப்பிந்திய முயற்சி.அவ்வாறு தமிழ் அரசியல் சக்தியை,தமிழ் வளத்தை,தமிழ்ப் பலத்தை,ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைப்பது ஏன் தவறானது என்பதற்கு அதை எதிர்ப்பவர்கள் விளக்கம் கூறுவார்கள்?