யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றவர், வைத்திய சாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று, தான் ஏற்றி சென்ற நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அதன்போது, பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவரை, வைத்திய சாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் போது இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது பிரின்டரால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
அதனை அடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய சக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஒன்று கூடி தாக்குதலாளியை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த நபரை காவற்துறையினர் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.