ISIS தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாக நம்பப்படும் மிகவும் தேடப்படும் சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நான்கு பேரை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அனுப்புவதற்கு ஒருங்கிணைத்த நபரின் நெருங்கிய உறவினர் என சந்தேகிக்கப்படும் ஒஸ்மான் புஷ்பராஜ் என்ற தேடப்படும் சந்தேக நபரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
முன்னதாக சந்தேகநபரை கைது செய்வதற்காக, அவர் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு இரண்டு மில்லியன் ரூபா பணப்பரிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
இதன்படி, கொழும்பில் காவவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளை கையாள்பவராக 46 வயதான சந்தேக நபர் செயல்பட்டதாக இலங்கை பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மே 19 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களை கைது செய்தது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் ஒரு இடத்தில் கைவிடப்பட்ட மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களையும் கைப்பற்றியதுடன் மற்றும் அவர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.