யாழ். போதனா மருத்துவமனையில் என்பு மச்சை மாற்று சிகிச்சைப் பிரிவு (Bone Marrow Transplant Unit) கடந்த சில மாதங்களுக்கு முன் தாபிக்கப்பட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்குத் தேவையான பல இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகளை அரசினால் வழங்க முடியாத நிலை காணப்பட்டதால் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சையை ஆரம்பிப்பது என்பது சவாலாக இருந்தது.
இந்த சிகிச்சைப் பிரிவைத் தாபித்து சிகிச்சையை ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான குருதிமாற்றீடு விசேட சிகிச்சை நிபுணர் திருமதி நில்மினி ஹெற்றியாரச்சி அவர்கள் மருத்துவமனை நிருவாகத்திடம் யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக இருவருக்கு இந்த சிச்சையை ஆரம்பிக்கத் தேவையான மருந்துகளை நன்கொடையாகப் பெற்றுத் தருமாறு பல தடவைகள் இரந்து கேட்டிருந்தார்.
தெரிவு செய்யப்பட்ட இரு பயனாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்வனவு செய்ய ஏறத்தாழ ரூ 525,000.00 தேவைப்பட்டது. பல நன்கொடையாளர்களிடம் இதற்காக விண்ணப்பித்த போதிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இறுதியாக தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் கலாநிதி வணக்கத்துக்குரிய செ. மோகனதாஸ் சுவாமி அவர்களிடம் விண்ணப்பித்த போது இதனது முக்கியத்துவத்தை உணர்ந்த சுவாமி அவர்கள் ஆற்றங்கரை வேலனது திருவுள்ளப்படி விண்ணபித்த 3 தினங்களில் இந்த நன்கொடையை யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களிடம் வழங்கி வட பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது சிசிச்சைக்கு, குறிப்பாக என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சையை யாழ். போதனா மருத்துவமனையில் ஆரம்பிக்க உதவியமை மிகவும் நன்றிக்குரியது. இது இப்பகுதி மக்களுக்குச் செய்த மிகப்பெரிய கைங்கர்யம் மட்டுமன்றி 174 வருட சரித்திரத்தைக் கொண்ட யாழ். போதனா மருத்துவமனை வரலாற்றில் மிகவும் முக்கியமான சிகிச்சையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுமாகும்.
குருதிப் புற்றுநோய் முதலான புற்றுநோய்களின் போதும் (Acute leukaemia, Multiple myeloma, Myelodysplastic syndromes, Hodgkin lymphoma, Non-Hodgkin’s lymphoma, Plasma cell disorders, POEMS syndrome, Primary amyloidosi ) குருதியில் ஏற்படும் ஏனைய சில குறைபாடுகள் , நோய் நிலைகளின் போதும் (Storage disorders, Bone marrow failure syndromes- Aplastic anaemia, Haemoglobinopathies/Thalassemia, Congenital immune deficiency syndromes, Multiple Sclerosis) என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் அரச மருத்துவமனைகளில் மகரகம அபேக்சா புற்றுநோய் மருத்துவமனையில் மாத்திரமே என்பு மச்சை மாற்று சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகின்றது. வடபகுதி நோயாளர்கள் மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் இந்த சிகிச்சையைப் பெற பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் பெறுவதாயின் பலகோடி ரூபாய் செலவாகும்.
நன்கொடை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணத்தில் இந்த சிகியைச்சை ஆரம்பிப்பது வட பகுதி நோயாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைவதுடன் இதனை ஆரம்பிக்க உதவிய மதிப்புக்குமுரிய மோகனதாஸ் சுவாமி அவர்களுக்கும் சந்நிதியான் ஆச்சிரமத்துக்கு நிதியுதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் நன்றியையைத் தெரிவித்தார்.