அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (04.06.2024) காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் 8.30 மணிக்கு இவிஎம் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது.
பாஜக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 194 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் தகவலின் படி, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி 21,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதே போல, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 80,203 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் (காலை 10.30 மணி நிலவரப்படி).
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, மத்திய சென்னை, வட சென்னை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 36 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார். நாமக்கல், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவதால், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்செக்ஸ் 1,811.69 புள்ளிகள் சரிந்து, 74,657.09 என்ற அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. நிப்டி 532.90 புள்ளிகள் சரிந்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மக்களவைத் தேர்தல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA), இந்தியா கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகத் தான் பார்க்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இதில் 441 தொகுதிகளில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை. மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே தான் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றும், பிரதமர் நரேந்திர மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு என்றும், மக்களின் உண்மையான தீர்ப்பு இன்று (ஜூன் 4) தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
நன்றி – பி.பி.சி