மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை பா.ஜ.க பெற்றிருக்கின்றது.
இதேவேளை எதிர்க்கட்சிகளின் ”இந்தியா கூட்டணி” கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று, முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கின்றது.
இந்தியாவிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளார்.
ஆனால், கடந்த முறை 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்து பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை விட 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றி பெற்றார்.
மறுபக்கம், அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தோற்கடித்த பா.ஜ.க வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னௌவில் ராஜ்நாத் சிங் மற்றும் கன்னௌஜில் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதியாகியுள்ளதுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கின்றார்.
இதேவேளை மோடி ஆட்சி அமைத்தால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர், இந்தியத் தலைவர் ஒருவர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கின்றமை இது இரண்டாவது முறையாகக் கருதப்படும்.