எத்தனை எத்தனை எத்தனை கனிவகை
அத்தனை கனிவகை நாமுண்டு திளைத்தோம்
எத்தனை கனிவகை ஊர்களில் இருந்தன
அத்தனை கனிவகை நாமுண்டு திளைத்தோம்
நினைக்கும் பொழுதினில்
நாவெல்லாம் ஊறிடும்
அக்கனி வகைகள் எங்கே போயின?
எங்கே எங்கே எங்கே போயின?
நற்கனி வகைகள் எங்கே போயின?
பலபல நிறங்கள் பலபல குணங்கள்
சுவைகள் பலபல மணங்கள் பலபல
பலபல அளவுகள் பலபல வடிவங்கள்
நிறைகளும் பலபல நினைவுகள் பலபல
காலங்கள் தோறும் வகை வகைக் கனிகள்
ஊரெல்லாம் கனியச் சுவைத்திருந்தோமே
குருவிகள் கூட்டமும் சிறுவர்கள் குறும்பும்
ஊரினை வளைத்துக் கலகலப்பாக்கும்
பழங்களைப் பறித்தோம் எறிந்தோம்
விதை தரும் மரஞ்செடி கொடிகளை அறிந்தோம்
கனிதரும் பருவ காலங்கள் கணித்தோம்
பகுத்துண்டு வாழ்தலை பழமுண்டு கண்டோம்
விதவிதமாகவே பதம் பண்ணி உண்ணும்
விதையில் வல்லவர் நாங்கள் என்றிருந்தோம்
பற்றைக் காடுகள் பள்ளிகள் ஆயின
பழம் பறித்துண்ணல் படிப்பும் ஆயிற்று
பழங்களை இழந்தோம் சுவைகளை அறியோம்
இயற்கை தந்த கொடைகளை இழந்தோம்
பற்றைகள் செத்தைகள் இயற்கையின் வீடுகள்
பல்லுயிர் வாழ்க்கையின் பசுமைக் காடுகள்
சூழலுக்கிசைந்த செடி கொடி அழித்தோம்
சுவைதரும் பலவகைச் கனிகளை ஒழித்தோம்
எஞ்சியிருப்பவை அருகினில் இருப்பினும்
அவற்றினை அறியாத அறிவு கொண்டோமே
எங்கே எங்கே எங்கே போயின?
எம்கனி வகைகள் எங்கே போயின?
இழந்தவை மீட்போம் இனியவை செய்வோம்
இயற்கையின் மடியினில் தவழ்ந்து மகிழ்வோம்