402




யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது . யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தினை கண்டித்தும் , நீதியான விசாரணைகளை முன்னெடுத்து , உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை தாக்குதல் சம்பவம் தொடர்பில், அச்சுவேலி , மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த மூவரை அச்சுவேலி காவல்துறையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Spread the love