பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
இதன்போது, வெளிநாட்டவர்கள் உட்பட கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 33 ஆகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த 13ஆம் திகதி பெண் ஒருவரிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளது.
தெரியாத நபர் ஒருவர் தன்னை வட்ஸ்எப் குழுவில் சேர்த்துக் கொண்ட நிலையில், டிக்டொக் சமூக ஊடக வலையமைப்பில் வீடியோக்களில் லைக்குகள் மற்றும் கருத்துகளை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று குழுவால் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம், பல சந்தர்ப்பங்களில் லைக் மற்றும் கமெண்ட் செய்ததற்காக தலா 750 ரூபாய் சம்பளம் பெற்றதோடு, மேலும் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட குழுவினர் தங்கள் டெலிகிராம் குழுவில் சேர்ந்து பணத்தை முதலீடு செய்யுமாறு அந்த பெண்ணுக்கு தெரிவித்துள்ளனர்.
அதன்படி பணத்தை முதலீடு செய்தப் போதிலும் அதற்கான இலாபத்தை கேட்டபோது, சம்பந்தப்பட்ட குழுவின் அட்மின், பணத்தைப் பெறுவதற்கு, வங்கிக் கணக்கில் ஒரு தொகை பணத்தை வரவு வைக்க வேண்டும் என்றார்.
அதன்படி, குறித்த பெண் பல தடவைகள் 54 இலட்சம் ரூபாவை அந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
ஆனால், வாக்குறுதி அளித்தபடி இலாபம் செலுத்தாததால், குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதன்படி, திணைக்களத்தின் பிரதிப் காவற்துறைமா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நேரடிக் கண்காணிப்பில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
புலனாய்வு அதிகாரிகள் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதை கண்டுபிடித்துள்ள நிலையில், அந்த கணக்குகளின் உரிமையாளர்களான தந்தை மற்றும் மகன் பேராதனை பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களும் இது தொடர்பான மோசடியில் சிக்கியதும், மோசடியாளர்கள் தெரிவித்தபடி இரண்டு வங்கிக் கணக்குகளை திறந்ததும் தெரியவந்தது.
மேலதிக விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகள் ஊடாக ஒன்லைனில் வழங்கப்பட்ட பீட்சா ஆர்டர் தொடர்பில் புலனாய்வாளர்களின் கவனம் செலுத்தப்பட்டதில், நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றுக்கு பீட்சா ஆர்டர் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது. அதன்படி நேற்று இரவு விசாரணை அதிகாரிகள் குறித்த வீட்டில் சோதனை நடத்தினர்.
இதன்போது, இந்த ஒன்லைன் மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்த விசாரணை அதிகாரிகள், மோசடிக்கு பயன்படுத்திய 57 கைப்பேசிகள், 13 கணினிகள், 3 மடிக்கணினிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தான், அல்ஜீரியா, நேபாளம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், இரண்டு இலங்கையர்களும் அடங்குவர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், நீர்கொழும்பு பொரதொட்ட பகுதியில் உள்ள மற்றொரு சொகுசு வீட்டை சுற்றிவளைத்த விசாரணை அதிகாரிகள் 19 பேரை கைது செய்ததுடன், 52 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 33 கணினிகளையும் கைப்பற்றினர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பாகிஸ்தான், இந்திய, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசிய பிரஜைகளும் அடங்குவர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் வெளிநாட்டவர்களும் சிக்கியது தெரியவந்தது.
இவர்களின் கிளைகள் துபாய் மற்றும் ஆப்கன் இராச்சியங்களிலும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வலையமைப்பில் தொடர்புடையவர்கள் ஒவ்வொரு கிளைகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், இது இலங்கையர்களை இணைய அடிமைகளாகப் பயன்படுத்தி மியன்மாரில் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தலுக்கு ஒப்பானது எனவும் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.