1.4K
இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் வடக்கின் அத்தியாயம் வருடந்தோறும் வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையில் நடாத்தும் கிரிக்கெட் திருவிழாவான Northern Engineers Premier League யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தை சேர்ந்த சுமார் 150 பொறியியலாளர்களின் பங்குபற்றலுடன் மிகவும் பிரமாண்டமாக இந்த கிரிக்கெட் சுற்று போட்டி நடைபெறவிருக்கிறது.
சுற்றுப்போட்டிக்கான வெற்றிக்கிண்ண அறிமுகம் , அணிகளின் சீருடை அறிமுகம் மற்றும் இலட்சனை அறிமுகம் ஆகியவை இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, நடாத்திய ஊடக சந்திப்பில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பில் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தை சேர்ந்த சுமார் 150 பொறியியலாளர்களை உள்ளடக்கி 08 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு இடையிலான 08 பந்து பரிமாற்றங்களை கொண்ட கிரிக்கெட் சுற்று போட்டி , எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மட்டுவில் வளர்மதி விளையாட்டு மைதானம் மற்றும் மட்டுவில் மகாவித்தியாலய மைதானம் ஆகியவற்றில் காலை 08 மணி முதல் நடைபெறும்.
சுற்று போட்டியாக போட்டிகள் நடைபெற்று, அன்றைய தினமே அரையிறுதி , இறுதி போட்டிகளும் நடைபெறும். இறுதி போட்டி அன்றைய தினம் சனிக்கிழமை மாலை 03.30 மணியளவில் வளர்மதி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறும்.
இறுதி போட்டியில் , மருத்துவத்துறை , சட்டத்துறை உள்ளிட்ட பிற துறை சார்ந்தவர்களை விருந்தினர்களாக அழைக்கவும் எண்ணியுள்ளோம். எதிர்காலத்தில் எமது பொறியியலாளர்கள் அணி , பிற துறை சார் அணிகளுடனும் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளோம். பொறியியலாளர்களை உள்ளடக்கி , கடின பந்து அணி ஒன்றினையும் உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
பொறியியலாளர்களின் ஒன்றிணைவு வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்காற்றும் என்கிற தூர நோக்கோடும் IESL-VC இன் செயற்பாடுகளை ஆக்கபூர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயற்படுத்தவும் வழிவகுக்கும் என்கிற நம்பிக்கையோடும் சமூக ரீதியான செயல்களுக்கும் விழிப்புணர்வுக்கும் பங்களிப்பு மிகப் பெரியதாகவும் பலமானதாகவும் அமையுமென்கின்ற அடிப்படையிலும் இந்நிகழ்வை ஒழுங்கமைத்திருக்கின்றோம்.
பொறியியற் துறையில் இயங்குகின்ற சில நிறுவனங்கள் இந்த நிகழ்வுக்கு நிதி அனுசரணை வழங்கி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பொறியியலாளனின் அசைவும் சொல்லும் செயலும் ஒரு பொறியை தட்ட வேண்டும். அந்தப்பொறி மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். NEPL மூலமும் ஒரு பொறியை தட்டுகிறோம்.
இந்நிகழ்வை பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் பாராட்டுவதற்கும் உற்சாகமூட்டுவதற்கும் எம்மோடும் எம் செயற்பாடுகளோடும் வரவேற்றுநிற்கின்றோம். கைகோர்த்துக்கொள்ளவும் என தெரிவித்துள்ளனர்.
Spread the love