மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு, இன்று(29.06.2024) வவுனியா விருந்தினர் விடுதியில்,காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணி வரையிலும் இடம் பெற்றது. இச்சந்தில் தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
சந்திப்பின் முடிவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக,கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையானது வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக கையெழுத்திடப்படும்.இவ்வாறு மக்கள் அமைப்பும் கட்சிகளும் சம அளவு பிரதிநிதித்துவம் வகிக்கும் பொதுக் கட்டமைப்பானது, இன்றிலிருந்து தமிழ்த் தேசியப் பேரவை -Tamil national forum- என்று அழைக்கப்படும்.
தமிழ்த் தேசியப் பேரவையானது ஜனாதிபதித் தேர்தலை நோக்கிப் பல உப கட்டமைப்புகளை உருவாக்கும். உப கட்டமைப்புக்கள் எல்லாவற்றிலும் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் சம அளவில் உள்வாங்கப்படுவார்கள். இக்கட்டமைப்புகளில் ஒன்று யார் பொது வேட்பாளர் என்பதை தீர்மானிக்கும். மற்றொன்று, பொது வேட்பாளருக்கு உரிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும். மற்றொன்று, நிதி நடவடிக்கைகளை முகாமை செய்யும். இவ்வாறு கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன் நிறுத்தும் வேலைகளை தமிழ்த் தேசிய பேரவையானது முன்னெடுக்கும்.
மேற்படி சந்திப்பில் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகள் கலந்து கொண்டன. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐந்து கட்சிகளும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கமும் என்று மொத்தம் ஏழு கட்சிகள்.