யாழ்ப்பாணம் , சாவகச்சேரி வைத்தியசாலையில் பதவி வழங்கப்படாத நிர்வாக தரம் அற்றவர்கள் தான் குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதை ஆராய வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் என்பவர் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக சில தரப்பினரால் அழுத்தங்கள் வழங்கப்படுவதாகவும், அவரது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பில் கடந்த இரு நாட்களாக நான் எனது கவனத்தை செலுத்தியிருந்தேன்.
அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமைகளை ஆரம்பித்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த காலங்களில் நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமையும், வளங்கள் வீணாக்கப்பட்டுள்ளமையும், உரிய வளங்களை பெற்றுக்கொள்வதில் அசண்டையீனத்தை அப்போதைய அத்தியட்சகர்கள் கொண்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வைத்தியசாலையின் மருந்தகம், நோயாளர் விடுதிகள், மகப்பேறு விடுதி, திடீர் விபத்து பிரிவு உள்ளிட்டவை முறையாக பாவிக்கப்படாத நிலையும், வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கியை இயங்க வைக்காத நிலையும் நீடித்து வந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் சாவகச்சேரி வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கிகள் இயங்காதநிலையில் அதுதொடர்பில் ஆராயும் முகமாக அங்கு சென்றிருந்த நான்,
வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களிடம் அங்கிருந்தே கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் குறித்த மின்பிறப்பாக்கிகளுக்கு ஒரு தீர்வும் எட்டப்படாத நிலை அதிர்ச்சியை தருகிறது. 2018 தொடக்கம் வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத நிலை தொடர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இவ்வாறிருக்க, வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தனது பணிகளை முன்னெடுக்கும் இக்குறுகிய காலப்பகுதியில் பிரதேச மக்களின் வரவேற்பு கிடைத்த போதிலும், சக பணியாளர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இவ்விடயத்தில் களமிறங்கியதோடு, வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை பதவியிலிருந்து அகற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலை நடவடிக்கைகளில் இருந்து 85 வீதமான வைத்தியர்கள் கடந்த இரண்டு நாட்களாக விலகியுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பித்திருப்பதோடு, நோயாளிகளும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளனர்.
மேலும் நேற்றைய நாளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க வைத்தியர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை வைத்தியசாலை வளாகத்தினுள் வைத்து தாக்கியிருப்பதாக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படித்த, எல்லோராலும் மதிக்கத்தக்க வைத்தியர்கள் இவ்வாறு அரசியல் நலன்களுக்காக அடிமட்ட நிலையில் செயற்படுவதானது கண்டிக்கப்பட வேண்டியது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சும், ஜனாதிபதியும் உடனடி கவனமெடுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, இன்றைய தினம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தேன்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் பற்றி உரிய விசாரணை செய்ய கௌரவ ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும், தகுதி நிலை வைத்தியர்கள் தமது பணிகளை இடையூறின்றி செய்ய உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
இதன்போது, பதவி நியமன அதிகாரம் தற்போது தன்னிடமிருந்து சென்றுவிட்டதாக கூடிய ஆளுநர் அவர்கள், இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்துவதாகவும் ஒருநாள் அவகாசம் தருமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் கடந்த காலங்களில் நிர்வாக தர அதிகாரிகள் எவரும் நியமிக்கப்படாமலிருந்ததாகவும், இம்முறையே நிர்வாக தரத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவராக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதில்கூறிய நான், அவ்வாறு பதவி வழங்கப்படாத நிர்வாக தரம் அற்ற ஏனையவர்கள்தான் இந்த குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதையும் ஆராய வேண்டும் என தெரிவித்தேன் என்றார்