பூநகரி கௌதாரிமுனைப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதியை மூடி பெருமளவு மணல் குவிந்தமையால் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப் பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்ய மாவட்ட செயலகமோ தொடர்புடைய அரச அலுவலகங்களோ அக்கறையற்றிருப்பதால் வீதியின் ஊடாக போக்குவரத்து செய்யும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த வீதியில் புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் சோழர் கால சிவன் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் செல்வதுடன், பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் நோயாளிகளென பலரும் அன்றாடம் மணல் திட்டின் ஊடாக பயணிக்க முடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேவேளை கௌதாரிமுனைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கண்ணிவெடியகற்றல் பணிகளும் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டமையால் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் வீதியில் குவியும் மணலை பூநகரி பிரதேசசபையே அகற்றி போக்குவரத்தினை சீர் செய்து வந்திருந்தது.
எனினும் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள கனியவள திணைக்கள அலுவலகம் வீதியில் குவிந்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதியினை வழங்கியிருக்கவில்லையென கூறி பூநகரி பிரதேசசபை பின்னடித்துவருகின்றது.
எனினும் தாங்கள் வீதி போக்குவரத்தை பொதுமக்கள் தொடர ஏதுவாக மணலை அகற்றுவதற்கான விண்ணப்பத்தை கனியவள திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் பிரதேசசபை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த மாதம் கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நடைபெறவுள்ளதுடன் வழமை போல ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் திரள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கனியவளத்திணைக்களம் போன்ற அரச அலுவலகங்களது பொறுப்பின்மையால் தாம் பாதிக்கப்பட்டுவருவதாகவும் தமக்கான போக்குவரத்து பாதையை திறந்துவிடக்கோரி முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.