Home இலங்கை இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றாவிட்டால் பணிப்புறக்கணிப்பு!

இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றாவிட்டால் பணிப்புறக்கணிப்பு!

by admin

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா நாளை காலை 8 மணிக்கு முன்னதாக வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளையினர், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட
ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,

சாவச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா நியமிக்கப்பட்டதன் பின்பு ஏற்பட்ட பிரச்சனைகள்  யாவரும் அறிந்த ஒன்று. இவ்விடயம் தொடர்பான தவறான புரிதல்கள் பொதுமக்கள் மத்தியில் காணப்படுவதனால் அது பற்றிய தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
தனிப்பட்ட ஒரு மருத்துவரின் நிர்வாகம் சார்ந்த பிரச்சனை ஒட்டுமொத்த வைத்திய சமுகத்தையும் பாதித்துள்ளது. எனவே  உண்மை நிலையை எடுத்துரைப்பதோடு அறிவுக் கண்கொண்டு இவ்விடயத்தை பொதுமக்கள்  அணுக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பதவியேற்ற பின்னர் அங்கு கடமையாற்றிய அனைத்து வைத்தியர்களும் ஒருமித்த குரலில் வைத்தியசாலையை விட்டு வெளியேறி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது என்றும் காலக்கெடு இன்றி விடுதியில் இருந்து கடமையாற்றிய வைத்தியர்களை உடனடியாக வெளியேற்றும் சர்வாதிகார முறையினை பிரயோகித்தது சரியா எனவும் நீங்கள் ஏன் சிந்திக்க மறந்தீர்கள் ?
ஒரு வைத்தியராக நோயாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பான சிகிச்சையை வழங்க முடியாமல் போகும் பட்சத்தில் தொடர்ந்து அங்கு பணியாற்றுவது என்பது முடியாத ஒன்று.  நோயாளர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத  நிலையில் அங்கு பணியாற்ற முடியாத நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதே நேரம் உடனடியாக பணிப்புறக்கணிப்பையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.
தான் கடமையேற்ற இரண்டு மணித்தியாலங்களில் வைத்தியர்கள் தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியேறுமாறு அவர் பணித்துள்ளார்.
மகப்பேற்று விடுமுறையில் இருந்தவர்கள் என்று கூடக் கருதாமல் மனிதாபிமானம் அற்ற முறையில் கட்டாய இடமாற்றத்திற்கு வைத்தியர்களை உள்ளாக்கியுள்ளார்.
வைத்தியர்களது மூடப்பட்டிருந்த  விடுதிகளை உடைத்து தன்னகப்படுத்தியுள்ளார்
இவரது அதிகார தோரணைகளையும் அட்டூழியங்களையும் தட்டிக் கேட்ட வைத்தியர்களை உளரீதியாகப் பாதிப்புக்கு ஆளாகும் படியான தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியதுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கட்டாய இடமாற்றங்களையும் வழங்கியுள்ளார். இதனால் வைத்தியர்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியர்கள் மீது இவர்  கொண்டிருந்த தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளே இவரது சர்வாதிகாரத்தனமான செயற்பாடுகளுக்குக் காரணமாகியுள்ளது. இவற்றை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி பொறுமை காத்து வந்தனர் சாவச்சேரி வைத்தியர்கள்.
அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்றுப் பிரிவுகளை மின் பிறப்பாக்கி வசதியற்ற கட்டடத்திற்கு மாற்ற முற்பட்ட வேளையில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவே பாதுகாப்பாக இக்கட்டடத்தை மீள ஆரம்பிப்போம்  இல்லையெனில் அதற்கான மாற்று ஏற் பாடுகளை மேற்கொள்வோம் என வைத்திய நிபுணர்கள் அறிவுரை கூறியபோதும் அவசர அவசரமாக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து  இடமாற்றியுள்ளார்.
இரண்டாம் மாடிக்கு மாற்றப்பட்ட மகப்பேற்று விடுதிக்குப் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணியை மின்தடை காரணமாக மேலெடுத்துச் செல்ல முடியாத நிலையில்  சாதாரணமாக மேற்கொள்ள வேண்டிய பிரசவத்தையும் செய்ய முடியாத நிலையில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வழமையாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசவத்தையும் அங்கு நடத்த முடியாதவாறே இவர் பணியாற்றியுள்ளார். இவற்றையெல்லாம் ஏற்கனவே எதிர்வுகூறித் தான் வைத்திய நிபுணர்கள் அவருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியிருந்தனர். இவரது பொறுப்பற்ற செயல்களினால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே.
இதன் பின்பே வைத்தியர்கள் தங்களது பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளரை அணுகினர். அவர்களும் அங்கு விஜயத்தை மேற்கொண்டு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாகாணப் பணிமனைக்கு மாற்றலாகுமாறு பணித்து இருபத்தினான்கு மணி நேரம் நிறைவுற்றும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதால் தொழிற்சங்கமாகிய அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாட்டிற்குள்ளாக்கப்பட்டோம்.
நாம் நமது தொழிற்சங்க கூட்டத்தை நடாத்துகின்ற இடத்தில் இவர் காணொளி எடுத்து எமது கூட்டத்தை குழப்பும் நோக்கத்தோடு செயற்பட்டதாலேயே இவரது கைபேசி தட்டி விடப்பட்டு  அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாறாக இவர் கூறுவது போன்று எவரும் அங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதை தெரியப்படுத்துகின்றோம்.
வைத்தியர்கள் அவரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதை அறிந்து ஆதாரங்களற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை  மேலதிகாரிகள் மீதும் வைத்தியர்கள் சமுகத்தின் மீதும் சுமத்தி மக்களை தன் வசப்படுத்தி தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இவர் நன்கு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றார். வைத்தியர்கள் மீது சுமத்தப்படுகின்ற ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்துமே  இவரது கபட நாடகமே.
இவர் வன்முறைகள் நடந்ததாக கூறி  பொதுசன ஊடகங்களை தவறான முறையில் பாவித்து தனக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள இவரால் கூறப்பட்டவை இவரது கட்டுக் கதைகளும் கற்பனைகளுமே தவிர எந்தவித வன்முறைச் சம்பவங்களும் அன்று வைத்திய சாலையில் நிகழவில்லை .
வைத்தியர்கள் அவருக்கு எதிரான முறைப்பாடுகளை முன்னெடுப்பதை அறிந்த வைத்தியர் ஆதாரங்கள் அற்ற பிழையான சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளை தனது மேலதிகாரிகள்மீதும் வைத்தியர்கள் மீதும் சுமத்தி மக்களை திசை திருப்பி
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள புத்திசாதுரியமாக முனைக்கின்றார்.அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமாகிய நாங்கள் நியாயமான திணைக்கள ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி உண்மைகளை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை எப்போதும் மேற்கொண்டு வருவதோடு ஊக்கப்படுத்தியும் வருகின்றோம்.
வைத்தியர்களுக்குள் நடக்கும் உட்பூசல்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் தீய சக்திகள் மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்பி வசை பாடவைத்து தமது அரசியல் கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இன்று வரை எத்தனை நோயாளிகள் அதி தீவிரத்தன்மையுடன் வருகை தந்து தமக்கான மருத்து சிகிச்சைகளைப் பெற்றுச் சென்றுள்ளனர. ஆளணிப் பற்றாக்குறை, கட்டமைப்பு ரீதியிலான சிக்கல் வாய்ந்த தன்மை, பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு     மத்தியில் அங்கு பணியாற்றி வருகின்ற வைத்தியர்கள் அர்ப்பணிப்புடனும் தம்மை நாடிவரும் நோயாளர்களுக்குத் தேவையான சேவைகளை திறம்பட ஆற்றி வருகின்றனர்.
வைத்திய நிர்வாகியான இராமநாதன் அர்ச்சுனா ஏனைய வைத்தியர்களுக்கும் ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக செயற்படுவதை விடுத்து நோயாளர்களது உணவைத் தான் உண்பது, வேலை நேரங்களில் சமூக வலைத்தளங்களினைப் பயன்படுத்தல், தனது உயர் அதிகாரிகளின் கட்டளைகளை மீறுதல், வைத்தியசாலை  விடுதிகளை தன்னகப்படுத்தல், தனக்கு நியமிக்கப்பட்ட நியமனத்திற்கு செல்லாமல் சாவகச்சேரி வைத்தியசாலையின் சாதாரண செயற்பாடுகளுக்கு ஊறு விளைவித்து வருகிறார்.
தான் இதுவரை பெற்றுக் கொள்ளாத பட்டத்தினை தனது அலுவலக முத்திரையாகவும், அலுவலக ஆவணங்களிலும் பயன்படுத்துவதென்பது சட்டப்படி பாரிய குற்றமாகும்.
இவ்வாறு அரச சேவையில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் செய்வாராயின்  நாட்டின் நிலைமை என்னவாகும்?
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மாற்றப்பட்டு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமிக்கப்பட்டதன் பின்பு வைத்தியசாலை நடவடிக்கைகள் யாவும் சுமுகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை நீங்கள் யாவரும் அறிந்த வொன்று.
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வைத்தியசாலை விடுதியை மீள ஒப்படைக்காமல் அங்கு தங்கியிருந்து வைத்தியசாலைக்குள் வெளியாட்களை  அழைப்பது ,சமூக வலைத்தளப் பதிவுகளூடாக மக்களை வைத்தியர்களுக்கு எதிராக திசை திருப்ப முனைவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வைத்தியசாலையில் கடமையில் இருக்கும் வைத்தியர்களும் விடுதியில் உள்ள வைத்தியர்களும் சாதாரண செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாது சிரமங்களை ஏற்படுத்துவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக
மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் நாம் வைத்தியசாலை நடவடிக்கைகளை சுமுமாக்குவதற்கும் வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மீண்டும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களாகிய தாங்கள் அறிவுக் கண்கொண்டு சிந்தித்து செயற்படுமாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினராகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள்  வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனாவிடமிருந்து நாளை புதன்கிழமை காலை 8 மணிக்கு முன்பு வைத்தியசாலை விடுதியை பெற்று  வைத்தியசாலை சேவையை சுமூகமாக இயங்குவதற்கும் வைத்தியர்களிற்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க தவறின் நாம் எமது உறுப்பினர்களாகிய வைத்தியர்கள் அனைவரையும் காலை 8 மணி முதல் வைத்தியர் இராமணாதன் அர்ச்சுனா விடுதியை ஒப்படைத்து வெளியேறும் வரை தொழிற்சங்க போராட்டமாக யாழ் .பிராந்திய சுகாதார பணிமனையில் இனைக்கவுள்ளோம் என்பதை மிக மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். – என்றுள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More