யாழ்ப்பாணம் , சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த 17ஆம் திகதி இரவு வெளிநோயாளர் பிரிவில் வைத்தியர்கள், தாதியர்கள் இருக்கவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் , வைத்தியசாலை அத்தியட்சகர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கோரியுள்ளார்.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17ஆம் திகதி இரவு விசபூச்சியின் கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு வேளையில் மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை என்றும் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டு கொண்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.
செய்திகளின் அடிப்படையில், 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை கடந்த 05ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.
அக்களவிஜயத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் கடந்த 08ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பளார், யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆகியோருடன் கலந்துரையாடல் மனிதவுரிமை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பான அறிக்கை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மத்திய மற்றும் மாகாண சுகாதார சேவை அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமை காரியாலயத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கலந்துரையாடலுக்கு
01. செயலாளர்- சுகாதார அமைச்சு, கொழும்பு
02.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்-சுகாதார அமைச்சு, கொழும்பு
03.மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்- வடக்கு மாகாணம்
04.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்- வடக்கு மாகாணம்
05.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- யாழ்ப்பாணம்
05.மருத்துவ அத்தியட்சகர்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை
ஆகியோரை சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.