யாழ்ப்பாணம்,புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன பெட்டகம் உடைக்கப்படாத நிலையில் காணாமல் போயிருந்தன.
போலி சாவியை பயன்படுத்தி நகைகள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவி பூசகர் ஒருவரை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அந்நிலையில் மறுநாள் பூசகரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய காவற்துறையினர் பூசகரை மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர்
அதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததை அடுத்து, பூசகரை காவற்துறையின் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை மேலும் 22 பவுண் நகைகளை மீட்கப்பட்டுள்ளது.