Home இலக்கியம் உள்ளூர் ஆற்றுகை கலை மரபுகளின் திருவிழா!

உள்ளூர் ஆற்றுகை கலை மரபுகளின் திருவிழா!

by admin

மாமாங்கர் ஆலய திருவிழா முற்றத்தில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்தும்

உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழா 2024

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாமாங்கர் ஆலய வண்ணக்கர் சபையினரின் ஆதரவுடன் முன்னெடுத்துவரும் மேற்படி விழாவானது இந்த ஆண்டும் மாமாங்கர் ஆலய முற்றத்தில் களரி, தோரண அலங்காரங்களுடன் பகல் – இரவு நிகழ்ச்சிகளாக இடம்பெறவுள்ளது.

29.07.2024 – 01.08.2024 வரை இடம்பெறவுள்ள உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழாவானது வழமைபோல கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை, மாமாங்கர் ஆலய வண்ணக்கர் சபை இணைவில்; உள்ளூர்க் கலை மரபுகளின் கலைஞர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைவில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் “உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழா 2024” முழு இரவுக் கூத்துக்கள், சிறுவர் கூத்துக்கள், மகிடிக் கூத்துக்கள், உள்ளூர் வாத்திய இசைக்கருவிகளின் முழக்கங்கள், உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் காட்சிப்படுத்தல்கள், உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் ஆளுமைகள், ஆர்வலர்களுடான சந்திப்புக்கள் என காலை 10.00 மணி முதல் பகல் – இரவாக முழுநாள் நிகழ்ச்சிகள் 29.07.2024 – 01.08.2024 மாமாங்கர் திருவிழா முற்றத்தில் இடம்பெறவுள்ளன.

இந்த ஆண்டு முல்லைத்தீவு கோவலன் கூத்து, முள்ளியவளை மகிடிக் கூத்து என்பன 01.08.2024ல் இடம்பெற உள்ளமை சிறப்பான விடயமாகும்.

ஈழத்து ஆற்றுகைக் கலை மரபுகளில் தனித்துவமிக்க முல்லைத்தீவு கோவலன் கூத்தும் முள்ளியவளை மகிடிக் கூத்தும் முதன்முறையாக மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்படவுள்ளது. இது கூத்து ஆர்வலர்கள், நாடக அரங்கியல் மாணவர்கள், பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு மாணவர்களுக்கு மிகப்பெரும் வாய்ப்பாகும். மேற்படி மகிடிக்கூத்து மாலை 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரையிலும், கோவலன் கூத்து இரவு 10.00 தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை இடம்பெறும்.

ஈழத்து அரங்கின் புதிய உருவாக்கமான சிறுவர் கூத்துக்கள் 29, 30, 31.07.2024 திகதிகளில் மாலை எழு மணி முதல் எட்டு முப்பது மணி வரை இடம்பெற உள்ளமையும் கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றது.

உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் ஆற்றுகைக் களமாகவும்; ஆற்றல் வெளிப்பாட்டுக் களமாகவும்; அனுபவப் பகிர்வின் களமாகவும், உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழா அமைவது வழமையாகும்.

அந்த வகையில் உள்ளூர்க் கலைமரபுகளின் பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுனர்களுடனான உரையாடல் களங்களும் பகல் வேளைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

உள்ளூர்க் கலை மரபுகள், உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகள் அருகிப் போய்விட்டன, அழிந்து போய் விட்டன, அவற்றைப் பாதுகாக்க வேண்டும், பேண வேண்டுமெனவும், செம்மையற்றதும், பாமார்களதுமான இக்கலை மரபுகளை செம்மைப்படுத்த வேண்டும், நவீனப்படுத்த வேண்டும் எனவும் கூவித்திரிந்து நிதிகளைப் பெற்று வாழும் இடைத்தரகர்களின் பொய்மைகளையும் மரபுரிமைகளைப் பேணவேண்டுமென நிதி வழங்கும் நிறுவனங்களது பொறுப்பற்ற தன்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆற்றுகை அறிவியற் செயற்பாடாகவும் உள்ளூர்க் கலை மரபுகளின் திருவிழா அமைவது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.

காலங் காலமாகப் பயிலப்பட்டுவரும் உள்ளூர்க் கலை மரபுகள், ஆற்றுகைக் கலை மரபுகள் சமுதாயக் கலையாக அமைந்து, சமுதாயத்தால் கலையும்; கலையால் சமுதாயமும் வளமும் வலுவும் பெறுவது முக்கிய புரிதலுக்குரியது.

கொண்டாட்டமாக, சமுதாயமயப்பட்ட உள ஆற்றுப்படுத்தலாக, ஆற்றல் வெளிப்பாடாக, வெளிப்பாட்டுக்களமாக, தமது வரலாறுகளை, வாழ்வியலை, செயற்திறன்களை இரைமீட்கும், பயிலும் களங்களாக உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின்  பயில் களங்கள் அமைந்து கூடிச் செயற்பட்டு திறந்த வெளிப் பல்கலைக்கழகங்களாக அமையும் அவற்றின் இயல்பான பாங்கின் பல்பரிமாணத் தன்மை விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது.

உள்ளூர்க் கலை மரபுகள் வெறுமனே ஆற்றுகை மட்டுமல்ல, ஆற்றுகை அவற்றின் ஒரு அம்சம் மட்டுமே. இது நவீன அறிவுக் கண்களுக்கு புலப்படுவதே இல்லை. அறியாமை காரணமாகவும்; வசதி கருதியும், சமுதாயக் கலைகளை தனியுடமையாக்கும் சுயநலம் கருதியும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பொருத்தப்பாடின்மையை, தவறினை நகரச் சூழலிலும் இயல்பான நிலையை அறியும் வகை செய்வதும்; இவை பற்றி அறியாத நகர மைய இளஞ்சமுதாயத்தினருக்கும்; இன்னும் வெளியாருக்கும் பார்க்க, அறிய, உரையாட வாய்ப்பினை வழங்கும் களமாக மாமாங்கர் திருவிழா முற்றத்தில் இடம்பெறுகின்ற உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் வருடார்ந்த திருவிழா களம் அமைகிறது.

உள்ளூர்க் கலை மரபுகளையும் அதன் கலைஞர்களையும் கீழ்நிலைப்படுத்தும் நவீன காலனிய அறிவையும்; அதனை கருவியாகப் பயன்படுத்தும் மனிதர்களும் கட்டமைத்து வைத்திருக்கின்ற பொய்மைகளை தகர்த்து உள்ளூர்க் கலை மரபுகளின் வாண்மையையும்; அதன் கலைஞர்களது வல்லபத்தையும் நகரச் சூழலில் வெளிப்படுத்தும் அரங்கவெளிச் செயற்பாடுதான் மாமாங்கர் முற்றத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழா.

உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழா 2024ல் மீண்டும் சந்திப்போம். மக்கள் கலைகளின் வாண்மையைக் கொண்டாடுவோம். அதன் கலைஞர்களது வல்லபத்தை மாண்பு செய்வோம்.

வன்முறைக் கூறுகள் நீக்கம் பெற்ற சமூக நீதிக்கான ஆற்றுகைக் கலை மரபுகளின் உருவாக்கத்திற்கும், விரிவாக்கத்திற்குமான களமாக உள்ளூர் ஆற்றுகைக் கலை மரபுகளின் திருவிழா மாமாங்கர் திருவிழா முற்றத்தில் நிகழட்டும்.

29.07.2024 – 01.08.2024 வரை காலை 10.00 மணி முதல் பகல் – இரவாக சந்திப்போம், பார்ப்போம், அறிவோம், பயில்வோம் கொண்டாடுவோம்.

பேராசிரியர்.சி.ஜெயசங்கர்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More