அவனியில் அழகுறும் இலங்கை திருநாட்டின் கிழக்கு இலங்கையின் முத்தமிழ் கலையும் தமிழர் பண்பாடும் செழித்து பொழித்து ஓங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரினில் புகழ்கொண்ட சகல வளமும் கொண்ட முத்தமிழை தாய்ப்பாலுடன் பருகிய மணம் மாறாத பல்வேறு கலைகளையும் வளங்களையும் கொண்ட கலைகளின் தேசம் எனும் அளவிற்கு நிகரான மண்முனை மேற்கு பிரதேசத்தின் ஆற்று அருகிலும் வயல்வெளிகளின் நடுவிலும் அமைந்துள்ள செந்தமிழ் குலம் வாழும் அழகிய கிராமமாம் கரையாக்கந்தீவு.
இந்த கிராமமானது தனது மூதாதையர் காலம் தொட்டு பல துறைகளிலும் சாதித்தது போன்று கலைத்துறையிலும் பல தசாப்தங்களாக தனது அடையாளத்தை பதித்துள்ளது. இந்த கிராமத்தின் கலாமன்றத்தின் தோற்றம் பற்றி நோக்கும் போது இது பல வருடங்களை கொண்டது. அந்த வகையில் ‘மாரியார்’ எனப்படும் எம்.எம்.திராவிடமுத்து எனும் புனைப்பெயர் கொண்ட இக்கிராமத்தைச் சேர்ந்த கலைஞனால் கிபி 1954 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இது பாரதி கலா மன்றம் எனும் பெயரில் இக்கிராமத்தில் முதன்முறையாக கலாமன்றம் உருவாக்கப்பட்டது
இவ்வாறு உருவாக்கப்பட்ட பாரதி கலாமன்றமானது பல வகையான கலைஞர்களை கொண்டு பல கலை நிகழ்வுகளை தன்னகத்தே ஆற்றுகை செய்துவந்துள்ளது இவ்வாறான பின்னணியில் இதன் ஸ்தாபகரான மாரியார் மரணித்ததன் பின்னர் அதன் வழிவந்த கலைஞர்களால் தொடர்ந்து பின் தொடரப்பட்டது. இருப்பினும் நாட்டின் அசாதாரண வன்முறை சூழ்நிலைகளினால் இவைகள் சற்று தளர்வு பெற்றமையும் கூறத்தக்கது. மன்றமானது “நாட்டுக்கூத்துக்கள்,வசந்தன்,கரகம், கும்மி,மேடை கூத்து,நகைச்சுவை நாடகங்கள், சமூக சீர்திருத்த நாடகங்கள், கிராமிய பாடல்கள்….” போன்ற பல்வேறு கலை படைப்புகளை ஆற்றுகை செய்துள்ளதுடன் இந்த வருடத்துக்கான அதாவது 2024 ஆம் ஆண்டுக்கான புதிய கலை படைப்பாக “அபிமன்னியு சுந்தரி கல்யாணம்” எனும் கரகத்தை நிகழ்த்தி பல ஆலயங்களில் ஆற்றுகை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது எனலாம் .
இவற்றுள் இவ்வாண்டுக்கான புதிய படைப்பான “அபிமன்னியு சுந்தரி கல்யாணம்” என்பதின் சாராம்சமாக அமைவது “இக்கரகத்தின் கதைக்களம் ஆனது மகாபாரதத்தின் பாரத போர் நிகழ்வதற்கு முன்னர் கௌரவர்களின் சார்பான படைகளை குறைப்பதற்காக கிருஷ்ணபகவான் தன் மனைவி இலட்சுமிதேவியார் ஊடாக துரியோதனனின் மகனான இலக்கணக்குமாரனுக்கும் தன் மகளான சுந்தரிக்கும் திருமணம் பேச அனுப்பி சகல முன் ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பின்னர் பாண்டவர்கள் வனவாசம் உள்ள வேளையில் அவர்களது புத்திரர்களான ‘வாளமீமன், கடோக்கஜன், அரவான், தொந்திச்செட்டி’ ஆகியோர்களின் பலத்தினை ஒன்று திரட்டி துரியோதனின் மாளிகைக்கு சென்று திருமண நிகழ்வின் போது அவர்களை போரிட்டு வாளமீமன் சுந்தரியை திருமணம் செய்து இலக்கணக்குமாரனுக்கு செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி கௌரவர்களை தோல்வி அடைய வைத்ததுடன் துரியோதனன் படையின் அளவை குறைக்கும் நிகழ்வாகவே இக்கரக நடனம் ஆனது அமைந்துள்ளது.”
இக்கரகமானது முழுமையாக கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலய பாடசாலை மாணவர்களை கொண்டு அவர்களின் கற்றல் செயற்ப்பாடுகள் பாதிக்கப்படாதவகையில் வித்தியாலய அதிபர் திரு மு. கலைச்செல்வன் அவர்களின் ஆதரவுடன் பாரதி கலாமன்றத்தின் அண்ணாவியரான திரு க.பரமானந்தம் அவர்களும் கொப்பியாசிரியராக ப.கிருபாகரனும் மற்றும் பின்னணியாக திரு க.உதயகுமார், திரு வி.ஜெயானந்தன் அமைய முகாமையாளராக திரு கு. ஜனகராஜ், திரு ம.விஜயகாந்தன், திரு த.தங்கவேல் ஆகியோர் செயற்பட இக் கலை நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களாக திரு சு.சந்திரகுமார், திரு ம.மகாலெட்சுமிகாந்தன் ஆகியோர் செயலாற்ற திரு . க .சிங்கராசா நெறியாள்கைபுரிய
திரு ச.கிருஷ்ணபிள்ளை உடையலங்காரம் செய்வதுடன் அவர்களின் கூட்டு முயற்சியால் கரக நடனம் ஆனது சுமார் 6க்கும் மேற்பட்ட அரங்குகளில் நிகழ்த்தப்பட்டு இன்று ஏழாவது அரங்காக மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றபடவுள்ளது. அத்துடன் கரையாக்கந்தீவு கணேசர் வித்தியாலய பாடசாலை மாணவிகளால் தயாரிக்கப்பட்ட “இரணிய சங்காரம்” எனும் தென்மோடி நாட்டுக்கூத்து நிகழ்வும் கரக நிகழ்வினை அடுத்து அரங்கேரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரதி கலா மன்றத்தினால் இதுவரை நிகழ்த்தப்பட்ட பல வகை படைப்புகள்
நாட்டுக்கூத்துக்கள்
இராம நாடகம்
வள்ளியம்மன் நாடகம்
மன்மதன் தகனம்
17ம், 18ம் போர்
சித்திரபுத்திரன் நாடகம்
பக்கா திருடன்
அருச்சுனன் காண்டாவனம்
குயலவன் நாடகம்
செட்டிவர்த்தக நாடகம்
குருக்கேத்திரன் நாடகம்
கடோட்கஜன் நாடகம்
கரகம்
காத்தவராயன் சரித்திரம்
வள்ளியம்மன் சரித்திரம்
சுந்தரி கல்யாணம்
இராமாயணம்
மார்க்கண்டேயர் கதை
அபிமன்னியு சுந்தரி கல்யாணம்
மேடைக்கூத்து
பஞ்சமாபாதகத்தி
இலெட்சுமி கல்யாணம்
பரிசாரி மகன்
குருக்கள்மடத்து குமரப்போடி
அத்துடன் பல புராண இதிகாச நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்ணாவியார்
திரு க.பரமானந்தம்
நிர்வாகம்
பாரதி கலா மன்றம்
கரையாக்கந்தீவு