Home இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா?

ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா?

by admin

 

“இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வுகூற முடியாதவை மட்டுமல்ல, ஊகிக்க முடியாதவைகளுந்தான்” என்று ஒரு மேற்கத்திய தூதராக அதிகாரி சொன்னார்.இலங்கைதீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமல்படுத்தப்பட்ட பின்,ஒரு பிரதான வேட்பாளர் அதுவும் ஜனாதிபதியாக இருப்பவர்,சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது என்பது இதுதான் முதல்தடவை. முன்னெப்பொழுதும் தேர்தல் களத்தில் இந்த அளவுக்கு நிச்சயமின்மைகள் நிலவியதில்லை. இது எதை காட்டுகிறது ?

போட்டி அதிகமாக இருப்பதை மட்டும் காட்டவில்லை பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்பதையும் காட்டுகிறது.

நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டு கட்சிதான் பலமாக உள்ளது.அதன் தயவில்தான் ஜனாதிபதி தங்கியிருக்கிறார்.ஆனாலும் அவரை வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக நிறுத்த தாமரை மொட்டுக் கட்சி தயாரில்லை என்று தெரிகிறது.கடந்த பல மாதங்களாக அது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிகிறது.

வெற்றியளிக்கவில்லை மட்டுமல்ல அவை முரண்பாடுகளை தவிர்க்க உதவவில்லை என்றும் தெரிகிறது.அண்மையில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் அதைத்தான் காட்டுகின்றன.ரணில்,தமது கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் கருத்து தெரிவித்திருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியதைப்போல அவர் தமது கட்சி பிரமுகர்களைக் கழட்டி எடுக்க முயற்சிக்கிறார் என்ற பொருள்பட நாமல் பேசியிருக்கிறார்.கிடைக்கும் தகவல்களின்படி தாமரை மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை நோக்கிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மனோகணேசன் தனது முகநூற்பதிவில் கூறியதுபோல, ராஜபக்சக்கள் ரணிலை தமது வேட்பாளராக்கினால் தம்மைப் பாதுகாக்கலாம் ஆனால் கட்சியைக் காப்பாற்ற முடியாது.ரணில் கட்சியைச் சாப்பிட்டு விடுவார் என்பதே சரி.

ஒரு சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி வளர்ச்சிப் போக்கில் பல்வேறு தரப்புக்களின் பொது வேட்பாளராக அவர் மாறக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன.அதன் மூலம் ராஜபக்சக்களின் தவறுகளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாத ஒரு வெற்றியைப் பெற அவர் முயற்சிக்கிறாரா?

இப்போதுள்ள நிலைமைகள் இதேபோக்கில் தொடர்ந்தும் வளர்ந்து சென்றால் தேர்தல் களத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதான வேட்பாளர்கள் நிற்க முடியும்.சரத் பொன்சேகாவும் விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதியின் நோக்கங்களை நிறைவேற்றும் டம்மி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்தும் தென்னிலங்கையில் உண்டு.சரத் பொன்சேகா அனுரவிற்குப் போகக்கூடிய படைத்தரப்பினரின் வாக்குகளை கவர்ந்து எடுப்பார்.அவரும் விஜயதாச ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவின் போட்டியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை கவரும் நோக்கத்தோடு களமிறக்கப்பட்டார்களா என்ற சந்தேகங்களும் உண்டு. எதுவாயினும் தென்னிலங்கையில் தேர்தல் களம் முன்னெப்பொழுதையும்விட நிச்சயமற்றதாகக் காணப்படுகின்றது. இது சிங்கள வாக்காளர்களைக் குழப்பும்;சிதறடிக்கும்.விளைவாக தெரிவு செய்யப்படப் போகும் ஜனாதிபதி பருமனில் கூடிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருவாரா என்பதும் சந்தேகம்தான்.அவருக்குக் கிடைக்கக்கூடிய சிங்களமக்களின் ஆணை ஒப்பீட்டளவில் பலவீனமாகவே இருக்கும்.

இந்தப்பின்னணியில் தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை கவர்வாராக இருந்தால் தெரிவு செய்யப்படப்போகும் ஜனாதிபதி மிகப்பலவீனமான ஆணையோடு பதவிக்கு வருவார். அவருக்கு தமிழ் மக்களின் ஆணையும் கிடைக்காது;கிடைக்கக்கூடிய சிங்கள,முஸ்லீம் மக்களின் அணையும் பலவீனமாக இருக்கலாம்.

இது அடுத்த ஆண்டு தென்னிலங்கை அரசியலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை வெற்றிகரமாக மீட்டெடுப்பது என்று சொன்னால் அதற்குப் பலமான ஒரு அரசுத் தலைவர் வேண்டும்.ஆனால் ஒப்பீட்டளவில் பலவீனமான மக்கள் ஆணையோடு தெரிவு செய்யப்படக்கூடிய ஒரு ஜனாதிபதி பொருளாதார நெருக்கடி தொடர்பில் துணிகரமான முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருப்பாரா?அவ்வாறு பொருளாதாரத்தை சீர் செய்ய முடியாவிட்டால் நாடு இன்னும் கொதிநிலைக்கு போகும்.இது முதலாவது விடயம்.

இரண்டாவது விடயம்,அவ்வாறு ஒப்பிட்டுளவில் பருமன் குறைந்த ஒரு வெற்றியை பெறக்கூடிய புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத் தேர்தலும் உட்பட ஏனைய தேர்தல்களை உடனடியாக வைக்கக்கூடிய நிலைமைகள் இருக்குமா? ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போகும் கூட்டு ஒரு பொதுத் தேர்தலை நடத்தி அந்த வெற்றியை மேலும் உறுதிப்படுத்தவும் பலப்படுத்தவும் முயற்சிக்கும்.ஆனால் தெரிவு செய்யப்பட போகும் ஜனாதிபதிக்கு கிடைக்க கூடிய வெற்றி ஒப்பீட்டளவில் பலமாக இல்லையென்றால் அந்தக்கூட்டு பொதுத் தேர்தலை வைத்து ஒரு விசப்பரீட்சையைச் செய்யுமா? அல்லது பருமனில் சிறியது ஆனாலும் அந்த வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்பி தேர்தல்களை வைக்கக்கூடுமா?அல்லது அப்படிப்பட்டதோர் சூழலில் ஒரு தேர்தலை வைத்தால் பலமான பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படுமா?

எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தென்னிலங்கையில் இப்பொழுது காணப்படும் போட்டி நிலை எனப்படுவது அல்லது நிச்சயமற்ற நிலை எனப்படுவது அல்லது ஊகிக்கமுடியாத நிலை எனப்படுவது நாடு ஒரு நிச்சயமற்ற ஆண்டை நோக்கிச் செல்கிறது என்ற ஊகங்களைப் பலப்படுத்துமா?

இதில் தமிழ்மக்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நிர்ணயகரமானவைகளாக இருக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.தமிழ்மக்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்களோ அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அதிகரிக்கும். அது அதன் தர்க்கபூர்வ விளைவுகளை தென்னிலங்கையில் ஏற்படுத்தும்.இப்படிப்பட்டதோர் நிர்ணயகரமான அரசியல் சூழலில் தமிழ்மக்கள் என்ன செய்ய வேண்டும்? தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்மக்கள் தென்னிலங்கை அரசியலுக்குப் பதில் வினையாற்றும் ஓர் அரசியலை தெரிந்தெடுப்பதா?அல்லது செயல் முனைப்புடன் இயங்கி தென்னிலங்கை வேட்பாளர்களை தங்களை நோக்கி வரச்செய்வதா?

தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகள் அவர்களோடு பேரம் பேசலாம் என்று நம்புகிறார்கள்.அப்படியென்றால் தென்னிலங்கை வேட்பாளர்களில் யாராவது ஒற்றை ஆட்சி முறைமையை மாற்றி சமஸ்ரியை ஏற்றுக் கொள்ளத் தயாரா? இல்லையென்றால் எது தொடர்பில் அவர்களோடு பேரம் பேசுவது?

அடுத்தது,அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும்வரை காத்திருப்பது என்பது தென்னிலங்கையின் நகர்வுகளுக்காகக் காத்திருக்கும் ஒரு அரசியல். இது சரியா?

அடுத்தது அவர்கள் எப்பொழுது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்? பெரும்பாலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான்.அப்பொழுது அவர்களுடைய தேர்தல் அறிக்கைகளில் பேரம் பேசக்கூடிய வாய்ப்புகள் இல்லையென்றால் என்ன முடிவை எடுப்பது? எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரோ ஒருவருடன் ஏதோ ஒரு டீலுக்குப் போவதைத் தவிர. அதாவது தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவைப் பொறுத்தவரை டீலுக்குக் காத்திருப்பதுதான். இனப்பிரச்சினைக்கான தீர்வைக் குறித்துப் பேரம் பேசுவதற்காக அல்ல.

அவர்கள் தேர்தல் அறிக்கைகளுக்காக காத்திருக்கவில்லை.முடிவெடுக்காமல் காலத்தைக் கடத்துகிறார்கள் என்பதே சரி. தேசியவாத அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் பிறத்தியாரின் முடிவுகளுக்காக காத்திருப்பது அல்ல.தானே முடிவெடுத்து,அதற்காக உழைத்து பிறத்தியாரை தன்னை நோக்கி வரச்செய்வது.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவு அதுதான்.

ஆனால் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை பொறுத்திருந்து எடுக்க முடியாது. ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை கூட்டிக்கட்டுவது என்ற முடிவை எப்பொழுதோ எடுத்திருந்திருக்க வேண்டும். அதை இனிமேல்தான் தென்னிலங்கை வேட்பாளர்களின் முடிவைக் கண்டு எடுப்பது என்பது தந்திரோபாயத் தவறு மட்டுமல்ல,தோல்விகரமானது.

தங்களை ஒரு தேசமாகக் கருதும் தமிழ்மக்கள் வெளியாருக்காகக் காத்திருப்பதை விடவும் தங்களை செயல்முனைப்போடு கட்டியெழுப்பதுதான் தேசியவாத அரசியல். அதுதான் தமிழ்ப் பொது வேட்பாளர்.

எனவே தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்காக காத்திருப்பது என்பது திட்டவட்டமாக தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பதுதான்.தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிப்பது என்பது தமிழ் அரசியல் சக்தியை ஒரு மையத்தில் குவிக்கும் செயற்பாட்டுக்கு எதிரானதுதான்.அதாவது தமிழ் மக்களை ஐக்கியப்படுத்திப் பலப்படுத்தும் செயற்பாட்டுக்கு எதிரானது.இதை இன்னும் அதன் தர்க்கபூர்வ விளைவின் அடிப்படையில் கூறின் தமிழ் மக்களைச் சிதறடிக்கும் சக்திகளுக்குச் சேவை செய்வது.

எவ்வாறெனில்,ஒரு பொது வேட்பாளரை ஆதரிக்காவிட்டால் சில அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளை சஜித்தை நோக்கிச் சாய்த்துச் செல்வார்கள்.இன்னொரு பகுதி குறிப்பாக ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கும், ரணில் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் நிமிர்த்தியிருப்பதாகக் கருதி அவருக்கு வாக்களிக்கும்.இன்னொரு பகுதி மாற்றத்தை வேண்டி அனுரவுக்கு வாக்களிக்கும்.ஒரு பகுதி தேர்தலைப் பகிஷ்கரிக்கும்.இவ்வாறு பலவாறாக தமிழ் வாக்குகள் சிதறும்போது ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் சலிப்படைவார்கள்;வாக்களிப்பில் ஆர்வமிழப்பார்கள்.அதாவது ஒரு வாக்களிப்பு அலை ஏழாது.அது வாக்களிப்பில் கலந்து கொள்வோரின் தொகையைக் குறைக்கும் மொத்தத்தில் தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும்.எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் அல்லாத எந்த ஒரு தெரிவும் தமிழ் வாக்குகளைப் பலவாகச் சிதறடிக்கும்

இப்பொழுது மிக எளிமையான ஒரு கேள்வி தான் உண்டு. தமிழ் மக்களை சிதறு தேங்காயாகச் சிதறடிப்பதா?அல்லது ஒவ்வொரு நெல்மணியாகக் கூட்டிக் கட்டுவதா?

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More