யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் கைதான 19 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை படகோட்டிகள் மூவருக்கு தலா 4 மில்லியன் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தண்ட பணம் கட்ட தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு வேறு தினங்களில் கைதான 31 தமிழக கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
அதன் போது, ஜூன் மாதம் 22ஆம் திகதி கைதான 22 தமிழக கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணையின் போது 19 தொழிலாளர்களுக்கும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை ஐந்து வருட காலத்திற்கு மன்று ஒத்திவைத்துள்ளது.
ஏனைய மூவரும் படகோட்டிகள் அவர்கள். அவர்களுக்கு மன்று 4 மில்லியன் ரூபாய் தண்டம் விதித்துள்ளது . தண்ட பணம் செலுத்த தவறின் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜூலை 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட 09 கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து 09 பேரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் மன்று நீடித்துள்ளது.