மூன்றாவது கண் நண்பர்கள் குழுவின் “நன்னிலம்” – (உள்ளூர்த் தாவரங்களை மீட்டெடுத்தலும் பரவலாக்குதலும்) செயற்பாட்டாளரினால் மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நடைபெற்ற மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், கொடிகள், விதைகளின் அறிமுகமும் பகிர்வுக்குமான சந்திப்புக்களம் செயற்பாடு இரண்டு நாட்கள் நிகழ்வாக 27,27.07.2024ஆந் திகதிகளில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசாரக் குழுவினரின் எங்கள் மரபார்ந்த உணவுக்காக பயன்படுத்தும் இலை வகைகள் , உணவுமுறைகள் பற்றி சிந்திக்கத் தூண்டவல்லதான ” எழுத்தாணி” நாடக ஆற்றுகையும் தொடர்ந்து ஓவியர்களான மதீஸ், ஜதீஸ் குழுவினரின் சிறுவர்களுடனான ஓவியச் செயற்பாடும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மரபார்ந்த மரங்கள், செடிகள், கொடிகளில் உள்ள இலைகளை சிறுவர்கள் வரைவதற்கான ஆற்றுப்படுத்தலையும் , மரபார்ந்த மரங்களின் இலைகள், பூக்களில் இருந்து பெற்றுக்கொண்ட இயற்கை வர்ணங்களையும் அவற்றுக்கு வர்ணங்களாக தீட்டுவதற்கும் வழிப்படுத்தி சிறுவர்களை மரபார்ந்த மூலிகைகள், உள்ளூர் மரங்கள், செடிகள், கொடிகள் பற்றி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும் இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கான சிந்தனையையும் ஏற்படுத்தியிருந்தது.
எங்கள் உள்ளூர் தாவரங்கள் பற்றி அனுபவமும், அறிவும், ஆர்வமும் கொண்ட சிலர் அவர்களது அனுபவங்களைப் பகிரும், கலந்துரையாடும் செயற்பாடும் ஒரு அங்கமாக நடைபெற்றது. அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு இன்றைய சமூக மக்களுக்கு அவசியம் எனக்கருதும் மரபார்ந்த தாவரங்கள் பற்றி கலந்துரையாடிய மண்டூரைச் சேர்ந்த பரமானந்தம் ஐயா அவர்களின் வேண்டுகோளாக மண்டூரில் கந்தசுவாமி ஆலய முன்றலிலும் இந்த விழிப்புணர்வை செய்ய முடியுமா? என்பதை நனவாக்கும் நிகழ்வினை நன்னிலத்தின் நடமாடும் பூங்காவனமாக “உள்ளூர்த் தாவரங்களை மீட்டெடுத்தலும் பரவலாக்குதலும் ” மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், கொடிகள், விதைகளின் அறிமுகமும் பகிர்வுக்குமான சந்திப்புக்களம் விழிப்புணர்வு செயற்பாடும் சூரியா பெண்கள் அமைப்பின் கலாசாரக் குழுவினரின் ” எழுத்தாணி” நாடக ஆற்றுகையும் தொடர்ந்து சிறுவர்களுடனான ஓவியச் செயற்பாடும் எதிர்வரும் 16.08.2024ஆந் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 தொடக்கம் இரவு 11.00 மணிவரை இடம்பெறும். ஆர்வலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதலும் இடம்பெறும் ஆர்வலர்களை அன்பாக அழைக்கிறோம்.
மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு.