Home இலங்கை பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கை

பொதுவேட்பாளரின் தேர்தல் அறிக்கை

by admin

 

ஜனாதிபதித் தேர்தல் 2024

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின்

தேர்தல் அறிக்கை

 

தமிழ்த் தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பா. அரியநேத்திரன் அவர்கள் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப்பொது வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது , தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பாகும்.

தமிழீழ விடுதலை இயக்கம் , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் தமிழர்தாயகத்தைச் சேர்ந்த அரசியற் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், புத்திஜீவிகள், சிவில் சமூகங்கள், அரசசார்பற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கிராமமட்ட அமைப்புகள்;, தொழில்சார் அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள், மாணவ அமைப்புகள் இணைந்து உருவாக்கிய மக்கள் அமைப்பாகிய தமிழ்மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பே தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு ஆகும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில்; உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சி பெறும்.

ஈழத் தமிழர்களாகிய நாம் இலங்கைத் தீவில் தனித்துவம் மிக்க ஒரு தேசிய இனமாகவும், தேசமாகவும் வாழ்ந்து வருகிறோம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, தனித்துவமிக்க பண்பாட்டைக் கொண்ட ஒரு தேசம் ஆவோம் இலங்கைத் தீவு பல்லின, பலமத, பல மொழி, பல் கலாசாரத்தைக் கொண்ட ஒரு தீவாகும். இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் விளைவே இனப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்கும் கூர்மை அடைவதற்கும் இறுதியில் விஸ்வரூபம் எடுப்பதற்குமான மூல காரணமாகும். தமிழ் மக்களுடைய தேசிய இருப்பை அழிக்கும் செயற்பாடுகளே இன அழிப்பாகும்.

தமிழர் தேசத்தின் இருப்பையும் தனித்துவத்தையும் அழித்து பெரும்பான்மை இனத்துடன் அதனைக் கரைக்கும் உள்நோக்கத்தோடு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது திட்டமிட்டு முன்னெடுத்த இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழ் மக்கள் முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராடினார்கள். அப்போராட்டங்களை நிர்மூலமாக்கும் குறிக்கோளோடு ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிகக் கொடிய விளைவே இறுதிப் போரில் நிகழ்ந்த உச்சமான இன அழிப்பாகும்.

இந்தப் பின்னணியில் உலகின் மிகப்பெரிய தமிழ் சட்டமன்றமாகிய தமிழக சட்டமன்றம் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றது. இன அழிப்பு என்று ஏகமனதாகத் தீர்மானமாக நிறைவேற்றியது. வடமாகாண சபை அதை இன அழிப்பு என்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனடாவில் பிரம்டன் நகர சபை அதை இன அழிப்பென்று ஏகமனதான ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது. கனேடிய நாடாளுமன்றம் மே பதினெட்டினைத் தமிழ் இனப்படுகொலை நினைவுகூரல் நாளாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. பிரான்சில் உள்ள நான்கு மாநகர சபைகளான டீழடிபைலெஇளுநஎசயnஇஊhழளைல-டுந-சுழiஇஏவைசல-ளுரச-ளுநiநெ என்பன அது இன அழிப்பு என்று தீர்மானமாக நிறைவேற்றின. ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சட்டசபையில்(ஊழபெசநளள) இந்த ஆண்டு மே15 அறிமுகப்படுத்தப்பட்ட 1230 தீர்மானமானது ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் நடத்தப்பட்டது இனஅழிப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் பொருட்டு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பு அவசியம் என்பதை அத்தீர்மானம் வலியுறுத்துகின்றது.

எனினும், இன்றுவரை இன அழிப்புக்கு பரிகார நீதியும் கிடைக்கவில்லை; இன அழிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்படவுமில்லை. மாறாக,

1-திருகோணமலையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் இருந்த இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால்; ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடங்கள் வேகமாக சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன.

மேலும், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 26க்கும் அதிகமான விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சில பாரம்பரிய தமிழ்க் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பல நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுபவை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட ஒரு மாவட்டம் இது.

2-மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புறம் சிங்கள பௌத்த மயமாக்கல் நடந்து வருகிறது. இன்னொரு புறம் நிலப்பறிப்பு தொடர்கிறது. உதாரணமாக 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான கால்நடை சார்ந்த பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு மயிலத்தமடு, மாதவனை போன்ற இடங்களில் மேய்ச்சல் தரைகளை அரச அனுசரணையோடும் பாதுகாப்போடும் சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன.

வாகரை. கதிரவெளியில் கனிமவள அகழ்வு மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றது. வாகரையில் இறால் பண்ணைகள் மக்களுடைய எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விரண்டு விடயங்களும் மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிப்பவை. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு எதிரானவை.

4-அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலர் பிரிவை முழுமையான ஒரு பிரதேச செயலர் பிரிவாகத் தரம் உயர்த்துமாறு தமிழ்மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பவில்லை. இனஅழிப்பு நடவடிக்கைகளால் அதிகம் விழுங்கப்பட்ட மற்றொரு மாவட்டம் இது.

5-வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் குருந்தூர் மலை, வெடுக்கு நாறிமலை, நீராவியடி ஆகிய இடங்களில் தமிழ் மரபுரிமைச் சின்னங்கள் அமைந்திருக்கும் சிறுமலைகளில் அரச திணைக்களங்களும் பிக்குகளும் அரச படையினரும் பௌத்த கட்டுமானங்களை உருவாக்கி வருகிறார்கள். அங்கேயும் நீதிமன்றத் தீர்ப்புகள் மீறப்படுகின்றன. இக்கட்டளைகளை வழங்கிய ஒரு நீதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்காக வெட்கப்படவேண்டிய அரசாங்கம் அவரைத் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தியது.

முல்லைத்தீவில் உள்ள கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி அகழ்வானது பன்னாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவில் மட்டும் 67 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் பொதுமக்கள் மற்றும் இராணுவம் இடையிலான விகிதம் 2:1 ஆக இன்னமும் இருக்கின்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட படையினர் முகாம்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.

6-வவுனியா மாவட்டத்தில் கொக்கச்சான் குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் குடியிருப்பு இராணுவப் பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் ஆக்கிரமிக்கப்பட்டு ;;கலாபோபஸ்வேவ’ என்ற பெயருடைய சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு மிகக்குறுகிய காலத்துக்குள் அந்த கிராமத்துக்குத் தேவையான சகல உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, அம்பாந்தோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களை அரசின் அனுசரணையோடு குடியமர்த்தி ‘நாமல்கம’ என்ற ஒரு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

7-மன்னார் மாவட்டத்தில், கனிம வளம் பறிக்கப்படுகின்றது. அங்குள்ள முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா கடற்படையானது அக்கிராமத்தின் பூர்வ குடிகளான தமிழ் மக்களை அங்கு முழுமையாக மீளக் குடியமர விடாமல் தடுத்து வருகின்றது.

மன்னார் புதைகுழி தொடர்பான உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை

8-கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழர் மரபுரிமைச் சொத்துகளை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்து வருகின்றது.

9-யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு முகாம்களை அமைத்திருக்கும் பெரும்பாலான காணிகள் தனியாருக்குரியவை. இவற்றுள் மிகச்சிறிய நிலப்பரப்புத்தான் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்திலும் தமிழர் மரபுரிமைச் சொத்துக்கள் பல ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன.

நாவற்குழியில் அரசின் அனுசரணையோடு ஒரு சிங்களக் குடியேற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக ஒரு புதிய விகாரை படையினரால் கட்டப்பட்டுவிட்டது.

10-தமிழர் தாயகம் எங்கும் தனியார் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள் பல இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டதாக அரச புள்ளி விபரங்கள் பொய் கூறுகின்றன.

தமிழர் தாயகமெங்கும் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் காடுகளின் பாதுகாப்பு, வனஉயிரினங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் காணிகள், பயிர்ச்செய்கை நிலங்கள், வணக்கத்தலங்கள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் அளவு நிலத்தை அபகரித்து வைத்திருக்கின்றன.

மேற்குறிப்பிடப்பட்டவை சில உதாரணங்கள் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளாக நிலப்பறிப்பும் சிங்கள பௌத்த மயமாக்கலும் அரசுக் கொள்கையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

11-புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட முன்னாள் இயக்கத்தவர்கள் 15 ஆண்டுகளின் பின்னரும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

12-தமிழ் மக்களின் அரசுக்கு எதிரான செயற்பாடுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது

13-அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்படவும் இல்லை.

14-மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்;, அரசியற் செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைகளும் அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

15-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகிய கடந்த ஓகஸ்ட் முப்பதாம் திகதியன்று திருகோணமலையில் நடந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் அரசியற் செயற்பாட்டாளார்கள் மீது அரச பயங்கரவாதமானது போலீஸ் நடவடிக்கை என்ற வடிவத்தில் ஏவி விடப்பட்டது. நீதிமன்ற கட்டளையின் கீழான இச்சட்ட நடவடிக்கை மூலம் அப்பேரணி குலைக்கப்பட்டது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தமிழர் தாயகமெங்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் தாயகத்தின் நிலத் தொடர்ச்சியைத் துண்டாடுவது, இன விகிதாசாரத்தைக் குறைப்பது, நிலத்தைப் பறிப்பது, தமிழ் மரபுரிமைச் சின்னங்களை அழிப்;பது, அங்கே சிங்கள பௌத்த மரபுரிமைச் சின்னங்களை ஸ்தாபிப்பது போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களே.

இந்த நடவடிக்கைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாத தன்மையைக் கொண்டவை. ஸ்ரீலங்கா அரசு என்ற மையத்திலிருந்து உள்நோக்கத்துடன் திட்டமிடப்படுகின்றவை. தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் ஆக்கிரமிப்பைப் பகலில் சட்டரீதியாகச் செய்கின்றன. பிக்குகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் சட்டத்தையோ நீதிமன்றத்தையோ காவல்துறையையோ மதிப்பதில்லை. படையினர் இரவுகளில் பௌத்த கட்டுமானங்களை இரகசியமாகக் நிர்மாணிக்கின்றார்கள்.

நிலப்பறிப்பு, சிங்களபௌத்தமயமாக்கல், அரசின் அனுசரணையுடனான குடியேற்ற நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளில் படைத் தரப்பு ஒரு சமாந்தரமான அரசைப்போல செயற்படுகின்றது. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் 65,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது

இனவழிப்புச் செயற்;பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அதேவேளை நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைதான் உண்டு என்று பொய்யான தோற்றத்தைக் கட்டியெழுப்பி பன்னாட்டு சமூகத்தை நம்ப வைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணமறுத்து இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தாலேயே நாடு கடனாளியாகியது. எனவே, இப்பொழுது நாட்டை பிடித்துலுப்பும் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் யுத்தத்திற்காகப் வாங்கிய கடன் சுமைதான்.

இப்பொழுது தென்னிலங்கையில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள அனைவரும் பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் விளைவுதான் என்பதனை மறைக்கின்றனர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கமுடியாது என்ற ஆழமான உண்மையை எந்த ஒரு தென்னிலங்கை வேட்பாளரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய பரப்புரையின் குவிமையமாக இருப்பது நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து எப்படி மீட்டெடுப்பது என்பதுதான். இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க பொருத்தமான முன்மொழிவு எதனையும் அவர்களில் யாரும் இதுவரை முன்வைக்கவில்லை.

யுத்த தளபாடங்களுக்காக முன்பிருந்த அரசாங்கங்கள் 25000 கோடி அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த ஒரு நிபுணரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைச் செலவழித்து முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரழிவு, பொருள் அழிவைக் குறித்து இதுவரையிலும் உத்தியோகபூர்வ மதிப்பீடு எதுவும் இலங்கை அரசாங்கத்தால் செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த அழிவுகளில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு சிறப்பு செயல்திட்டமும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவுமில்லை.

யுத்தத்துக்காகப் படையினரின் ஆட்தொகை பல இலட்சமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 40 விகிதம் படையினருக்கே செலவழிக்கப்படுகிறது. இலங்கைத்தீவின் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மொத்தச் சம்பளத்தில் ஏறக்குறையச் சரிபாதி படையினருக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளிலும் படைத்தரப்பின் ஆட்தொகை குறிப்பாக வடக்கு கிழக்கில் குறைக்கப்படவில்லை. அதாவது இராணுவமய நீக்கம் நிகழவில்லை. மாறாக, தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவே படைத்தரப்பு பெருஞ் செலவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான இராணுவ பொருளாதாரச் சூழலுக்குள் புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யத் தலைப்பட்டமாடடார்கள். அண்மைக் காலங்களில் அதிகரித்த அளவில் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.தற்போது புலம்பெயர்பவர்கள் படித்தவர்கள்: சமூகத்தில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்களே. இப்படிப்பட்ட தலைமை தாங்கும் தகைமையுள்ள படித்தவர்கள் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான இராணுவப் பொருளாதார சூழலுக்குள் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டுணர்வையும் நம்பிக்கையையும் தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியத்தையும் அவசரத்தையும் தென்னிலங்கைக்கும் உலக சமூகத்துக்கும் நிராகரிக்கப்பட முடியாத விதத்தில் உணர்த்த வேண்டியதும் அவசியம்.

 

 

 

தமிழ் மக்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகள்தான் உண்டு என்று தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கூறிவரும் ஒரு பின்னணியில் இனப் பிரச்சினையைப் பேசுபொருளாக்கி அதன்மீது தென்னிலங்கையின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்தோடு, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளராக திரு.பாஅரியநேத்திரன் அவர்களை முன் நிறுத்துகிறோம்.

கடந்த 46 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்;. 2009க்குப் பின் 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்மக்கள் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களில் வென்றவர்களும் சரி தோற்றவர்களும் சரி இன்றுவரையிலும் இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வைத் தரவும் இல்லை; இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தவும் இல்லை.

கடந்த 46 ஆண்டுகளாக ஜனாதிபதித் தேர்தல்களில் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பதில் வினையாற்றும் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டு இந்த முறை தமிழ்மக்கள் செயல்முனைப்போடு ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வது என்று எடுக்கப்பட்ட முடிவின் விளைவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஆகும்.

தமிழ்ப் பொதுவேட்;பாளர் தமிழ் மக்களை ஓரணியாகத் திரட்டுவார். அதேசமயம், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கித் தமிழ் மக்களின் கூட்டு விருப்பத்தை உலக சமூகத்துக்கும் தென்னிலங்கைக்கும் வெளிப்படுத்துவார். இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியையும் கோருவார்.

இந்த அடிப்படையில், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது இனப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வானது பின்வரும் அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்துகின்றது.

1-இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கத்தோடு உருவாக்க வேண்டிய இலங்கைத்தீவின் புதிய யாப்பானது தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2-தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான் இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தலாம். எனவே புதிய யாப்பு ஆனது இலங்கைத் தீவின் பன்மைத் தேசியப் பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் தேசங்களின் ஒன்றிணைவாக அமைய வேண்டும். அதாவது புதிய யாப்பானது இலங்கைத் தீவு ஒரு பன்மைத் தேசிய அரசாகக் (Pடரசiயெவழையெட ளுவயவந) கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

3-ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு அரசியல் தீர்வாலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது.

4-இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை தாமே நிர்ணயிப்பதற்குப் பொருத்தமான பன்னாட்டு ஏற்பாடுகளைக் கோருவதற்கு உரித்துடையவர்கள்.

5-தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான அலகானது ஒன்றிணைந்த தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணங்களை எல்லையாகக் கொண்டு அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புத் தயாராக உள்ளது.

6-மலையகத் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை நாம் அங்கீகரிக்கின்றோம். அந்த அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும். மேலும் உடனடி பிரச்சினைகளுக்கு அவர்கள் தொடர்ச்சியாகக் கோரி வரும் தீர்வுகளும் வழங்கப்பட வேண்டும். இத்தீர்வுகளுக்கான போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது மலையகத் தமிழர்களோடு தோளோடு தோள் நிற்கும்.

7-ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க் குற்றங்கள்;, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறைக் கட்டமைப்புக்கூடாக முழுமையாகவும் முறையாகவும் விசாரிக்கப்பட்டு, பரிகார நீதி வழங்கப்படுவதுடன், இன அழிப்புச் செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய வேண்டும். இதுவரையிலுமான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களின் தொகுக்கப்பட்ட அனுபவமாக ஐநா பொதுச் செயலர் பொறுப்பு கூறலை ஐநா பொதுச் சபையிடம் பாரப்படுத்துவதன் மூலம் இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணைகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.

8-அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நிலப்பறிப்பைத் தடுக்கவும,; நமது வளங்கள் இன அழிப்பின் ஒரு பகுதியாகச் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் தமிழர் தாயகத்தின் தேசிய வளங்களை இயற்கையின் சமநிலை குலையாத வகையில் வினைத்திறனுடன் பயன்படுத்தவல்ல தற்சார்பு பொருளாதாரக் கட்டமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.

இதற்கேற்ற வகையில் தமிழர் தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளையும் உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீடுகளையும் உள்வாங்கும் அதிகாரம் தமிழர் தேசத்துக்கு இருக்க வேண்டும்.

9-ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டடைவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தோடும், தமிழர் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று பன்னாட்டு சமூகத்தின் மேற்பார்வையின்கீழ் விசேட இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று(Pசழவநஉவiஎந ஆநஉhயnளைஅ)உருவாக்கப்பட வேண்டும்.

 

 

மேற்கண்ட தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுத் தமிழ் மக்கள் இதுவே தமது பொது நிலைப்பாடு என்று உலகுக்கும் தென்னிலங்கைக்கும் வெளிக்காட்ட பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராகிய திரு.பா.அரியநேத்திரன் அவர்களுடைய சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

பொதுவேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக முன் நிறுத்தப்படவில்லை. அவர் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்காகவும், கட்சிகளை ஒன்றிணைப்பதற்காகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருமித்த குரலில் ஒலிக்கச் செய்வதற்காகவுமே முன் நிறுத்தப்படுகிறார். ஒன்று திரண்ட தமிழ் மக்கள் உலகத்தின் முன்னும் தென்னிலங்கையின் முன்னும் பலமாக நிமிர்ந்து நிற்பார்கள். அதாவது அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகள் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கும் வாக்குகள்தான். தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களைக் கௌரவிக்கும் வாக்குகள்தான். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழ் மக்களின் தேசியக் கடமையாகும். சங்குச் சின்னத்துக்கு ஆகக்கூடிய தமிழ் வாக்குகளை வழங்குவதன் மூலம் அன்பான தமிழ் மக்களே எங்களை நாங்களே வெற்றி பெற வைப்போம்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More