133
தமிழ் பொதுக்கட்டமைப்பினர் இலங்கை புலனாய்வு பிரிவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவர்களை நம்பும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக , முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு கண்காணிப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பொது வேட்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில். உங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து காணப்படுவதாகவும், நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகிக்கொண்டு போகிறது என குறிப்பிட்டுள்ளார். இதொரு தேர்தல் குற்றமாகும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளேன்.
குறித்த கடிதத்தில் சுமந்திரன் கொலை செய்ய முயற்சிக்கின்றார் என குறிப்பிடவில்லை. ஆனாலும் சிலர் தமிழ் பொது வேட்பாளரை சுமந்திரன் கொலை செய்ய சதி என கூறுகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற நிகழச்சி ஒன்றிலும் யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் சுமந்திரனால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆபத்து என பிரதி பொலிஸ் மா அதிபரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார். அவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லவுள்ளேன்.
எனக்கும் வன்முறைக்கும் மிக மிக தூரம். நான் எப்பேதும் வன்செயலை ஆதரித்தது இல்லை. இதொரு தேர்தல் வங்குரோத்து அரசியலாகவே பார்க்கிறேன்.
இலங்கை புலனாய்வு துறையின் தகவல்களை நம்பி அரசியல் செய்யும் நிலைக்கு தமிழ் பொதுக்கட்டமைப்பு சென்றுள்ளது. அத்தனையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேவேளை ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகி செல்கிறது என சொல்கின்றார் என்றால் . பொது வேட்பாளர் யார் என்பதையும் மக்கள் புரித்து கொள்ள வேண்டும்.
அதேவேளை தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம். அவர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்பது தமிழரசு கட்சியின் வலுவான தீர்மானம். அது கட்சியில் உள்ள அனைவரையும் கட்டுப்படுத்தும்.
தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும், பா, அரியநேந்திரன் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அவரிடம் கட்சி விளக்கம் கோரி இருக்கிறது. அதற்கு இன்னமும் விளக்கம் தரவில்லை. அதனால் அவருக்கு எதிராக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love