374
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உயிர்நீத்த நேரம் காலை 10.48 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. மாவீரர்களின் சகோதரி, முன்னாள் போராளி பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல்நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்.
இதேவேளை தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரிலும் இடம் பெற்றது.
Spread the love