103
மதுபான சாலை அனுமதியினை பெறுவதற்காக சிபாரிசு கடிதம் ஒன்றினையே வழங்கினேன் அதனை வைத்து ஏதோ பெரிய பூதம் இருப்பது போன்று காட்ட முயல்கின்றனர். அவை என்னை எதுவும் செய்யாது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பெண்ணொருவர் என்னிடம் வந்து மதுபான சாலை ஒன்றின் அனுமதிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிபாரிசு கடிதம் தேவை என கேட்டார். அவரின் பெற்றோர் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் சிபாரிசு கடிதம் வழங்கினேன். அந்த கடிதம் கொடுத்தது உண்மை.
மதுபான சாலை அனுமதி பத்திரங்களை எடுத்து, அதனை கோடி ரூபாய் கணக்கில் விற்பதாக கூறுகின்றார்கள். அது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அரசியல் ரீதியாக என்னை அடிக்க வேண்டும் என்பதற்காக சிபாரிசு கடிதம் கையளித்ததை வைத்து, ஏதோ பெரிய பூதம் இருப்பது போன்று காட்ட முனைகிறார்கள். அதெல்லாம் என்னை எதுவும் செய்யாது என மேலும் தெரிவித்தார்.
Spread the love