227
வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தி விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர். யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார் வீதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றும் விபூஷண் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து , ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு , தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
யாழ் . நகர் மத்தியில் மிகுந்த சன நடமாட்டம் காணப்பட்ட நேரத்தில் வீதியில் ஒருவரை வழிமறித்து தாக்கி விட்டு இருவர் தப்பி சென்றமை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தாக்குதல் தொடர்பிலான வீடியோ காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் தாக்குதலாளிகளை இனம் கொண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love