யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மேற்கு, ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. யுத்தம் காரணமாக வலிகாமம் வடக்கு பகுதியில் வசித்து வந்த மக்கள் 1990ஆம் ஆண்டு கால பகுதிகளில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி சென்று இருந்தனர்.
சுமார் 31 வருடங்களின் பின்ன அப்பகுதி மக்களை மீள குடியமர அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் , ஐயனார் ஆலயம் மீள அப்பகுதி மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு , புதிதாக பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைக்கப்பட்டு புது பொழிவுடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விநாயக வழிபாட்டோடு கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. நாளைய தினம் சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களாக விநாயக வழிபாட்டோடு எண்ணெய் சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து மறுநாள் திங்கட்கிழமை காலை 6:30 மணிமுதல் விநாயக வழிபாட்டோடு மஹா கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாகி கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.