யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்போம் என பாதுகாப்பு செயலர் சம்பத் துயகொந்த யாழ்ப்பாணத்தில் உறுதி அளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர் , மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் 2ஆயிரத்து 700 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவித்து , காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்து காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.
தற்போது, பாதுகாப்பு மற்றும் ஏனயை காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம் . நிச்சயமாக சாதகமான முடிவுகளையே எடுப்போம். ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம்.அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம் ” என மேலும் தெரிவித்தார்.