71
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு , இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நாள்தோறும் சுகாதார சேவைகள், யாழ் போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்படும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நகரத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து, யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை, யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மற்றும் யாழ் ஒஸ்மானிய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தங்கியிருக்கும் மக்களுக்கான மருத்துவ சேவைகள் முன்னுரிமையுடன் வழங்கப்பட்டன.
மக்களின் உடல் நலத்தை உறுதிப்படுத்துவதற்காக வைத்தியர்கள், மருந்தாளர்கள், மற்றும் தாதியர்கள் ஆகியோர் தங்களின் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்று இந்த மருத்துவ முகாம்களை சிறப்பாக நடத்தினார்கள். மேலதிகமாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதே சமயம் வெள்ளம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகளுக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகின்றன.
அண்மையில் பெய்த கடுமையான மழையினால் வைத்தியசாலையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது. அப்பகுதியில் வழங்கப்பட்ட சேவைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஓரிரு நாட்களில் மீண்டும் அதே பகுதிகளில் சிகிச்சைகள் வழமைக்கு கொண்டுவரப்படும். இப்போது வெள்ள நிலைமை சீரடைந்து வருவதனால், அனைத்து சேவைகளும் வைத்திய சாலையில் வழமை போன்று நடைபெறும் என தெரிவித்தார்.
Spread the love