அறிமுகம்
மட்டக்களப்பு மாவட்டம் ஒரு தாழ்நிலப் பிரதேசம். வடகீழ் பருவப் பெயர்ச்சி அல்லது மொன்சூன் பருவத்தின் மூலம் டிசம்பர் முதல் பெப்ரவரி வரை அதிக மழைவீழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளுகின்ற அதேவேளை கணிசமான நீர் வரத்தினைக் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. எட்டு வடிநிலங்களுக்கூடாகவும் மத்திய மலைநாட்டின் அடிவாரங்களிலிருந்து கிடைக்கின்ற மழை நீர் மட்டக்களப்பின் ஊடாகவே வடிந்து கடலை அடைகின்றது. கடலை அடைவதற்கு முன்னதாக மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்புவதோடு, மேலதிகமான நீர் வாவிகளுக்கூடாகவும், தோணாக்களுக்கூடாகவும் கடலை அடைகின்றது. இந்நீரின் கடலை நோக்கிய பயணத்தில் தாழ்நிலப் பிரதேசங்கள் நீருள் மூழ்கி மக்களும், விவசாயமும் பலவிதமான பாதிப்புக்களைச் சந்தித்து வருவது இப்பருவ காலத்தில் வழமைமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. இங்கு ஏற்படுகின்ற வெள்ளம் உயிர்கள், உடமைகளைக் காவுகொள்ளும் அளவுக்கு பாரதூரமானதாக இதுவரையும் அமைந்ததில்லை என்றாலும், அது ஒரு சாதாரண வெள்ளமாகவே ஏற்பட்டு நிலையற்றுப் போகின்றது. அது மக்களின் நாளாந்த வாழ்க்கையை ஓரிரு நட்களுக்குப் பாதிப்பதோடு, நெற்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வந்துள்ளது. ஆனால் இம்முறை 27.11.2024 இல் மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு சடுதியான வெள்ளமாக (குடயா கடழழன) வடிவம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் எதிர்பார்த்திராத நிலையில் சடுதியாக வாவி நிரம்பி அதன் கரையோரங்கள் நான்கு அடிக்கு மேல் நீர் பரவும் அளவுக்கு வெள்ள நிலைமையைத் தோற்றுவித்தது. இவை தவிர தாழ்நிலங்களுக்குள் எதிர்பாராத விதமாக சில மணி நேரங்களுக்குள் நீர் சடுதியாகப் புகுந்ததுடன், சில இடங்களில் ஐந்து அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
சடுதியான வெள்ளத்துக்கான பின்னணி
சடுதியான வெள்ளத்தின் உருவாக்கத்துக்கு மனித தவறுகள் பிரதானமானதாக அமைந்து காணப்படுகின்றன. அதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தைத் தோற்றுவிப்பது அங்கு கிடைக்கின்ற மழைவீழ்சி மட்டுமன்றி, அயல் பிராந்தியங்களில் இருந்து வடிநிலங்கள் ஊடாக வந்து சேரும் மழைநீரின் அளவிலும் தங்கியுள்ளது. வானிலை எதிர்வு கூறல்களுக்கு அப்பால், எவ்வளவு நீர் மேல் நிலங்களிலிருந்து வந்து சேருகின்றது என்பதனை நீர்பாசன குளங்களின் நீர் மட்டம், வாவியின் நீர் மட்டம், வயல் நிலங்களின் நீர் மட்டம் ஆகியவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து எதிர்வு கூறல்களை உள்ளூர் மட்டத்தில் மேற்கொள்ளுதல் வேண்டும். காரணம் மழைவீழ்ச்சியைத் தவிர்த்து 16 அருவிகள் மூலமாக மேலதிகமான நீர் மாவட்டத்துக்குள் வந்து சேருகின்றன. இந்நீரின் அளவுவினை மதிப்பிட்டு, உள்ளூர் மட்டத்தில் முன்னெச்சரிக்கை வீடுக்கப்படவில்லை. கிடைத்த மழைவீழ்ச்சியின் அளவை விட, வேறு வழிகளில் வந்து சேர்ந்த நீரின் அளவு அதிகமாகக் காணப்பட்டதனால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்ததன் பிற்பாடே அவற்றின் வான் கதவுகளைத் திறப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இறுதி நேரத்தில் குளங்களின் அனைத்து வான் கதவுகளையும் திறக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியதால் வாவி பெருக்கெடுத்ததுடன், வயல் நிலங்களும், தாழ்நிலக் குடியிருப்புகளும் சடுதியாக நீருள் மூழ்கின. பாலமீன்மடு பிரதான முகத்துவாரத்தின் வழியாக நீர் சமுத்திரத்துக்கு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் கூட வாவி பெருக்கெடுத்து கரையோரங்களில் நான்கு அடி மட்டத்துக்கு மேல் நீர் பரவிச் சென்னறது என்றால் முகத்துவாரம் முன்கூட்டியே திறந்துவிடப்படாமல் இருந்திருப்பின் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கும்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டம் கடந்த சில தசாப்தங்களாக அடிக்கடி வெள்ள நிலைமக்கு உட்படுவதற்கு எமது கவனக் குறைபாடும் அதனோடு இணைந்ததான பௌதிகரீதியான மாற்றங்களும் காரணமாக அமைந்து காணப்படுகின்றன. வாவிகள், தோணாக்கள் இப்பிரதேசத்திற்கான இயற்கை வடிகால்கள் ஆகும். பெருமளவு நீரை கடலுக்குக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைச் செய்து, மக்களையும், பிரதேசத்தையும் பாதுகாத்து வந்துள்ளது. ஆனால் அவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள மானிட அழுத்தங்கள் அவற்றினுடைய திறனை இழக்கச் செய்துள்ளதால் வெள்ள நிiமைகளைத் தூண்டும் அளவுக்கு அவை அமைந்து காணப்படுகின்றன. ஆகவே வெள்ள நிலைமைக்கு உட்படும் பிரதேசங்களில் புவியியல் ரீதியான ஒரு மதிப்பீடு இன்றியமையாதவை. அதன் மூலமே வெள்ளத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, மாற்று வழிமுறைகளை முன்வைக்க முடியும். அந்தவகையில் வெள்ள நிலைமைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தூண்டும் காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன.
1. வாவி, குளம் மற்றும் தோணாக்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் புவியியல் ரீதியான மாற்றங்கள்.
2. வாவி, தோணா ஆகியவற்றின் மீதானதும், அதனோடு இணைந்ததுமான பொருத்தமற்ற அபிவிருத்தி திட்டங்கள்.
3. அத்துமீறி நடைபெற்று வரும் குடியிருப்புகள், கட்டுமானங்கள்.
4. முறையற்றதும் தொடர் பராமரிப்புக்கு உட்படாத வகையிலும் காணப்படுகின்ற வடிகால்கள்.
5. காலநிலை மாற்றத்தின் பிரதிபலிப்பாக குறைந்த நேரத்திற்குள் கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகும் நிலைமை.
ஆகியன முக்கியமானவையாகும்.
எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான வழிமுறைகள்
இன்றுள்ள மேற் குறிப்பிட்ட நிலைமைகளை மாற்றியமைப்பதற்கு ஏதுவாக நிலைத்திருக்கவல்ல முகாமைத்துவ உத்திகள் கண்டறியப்படாதிருக்குமானால் அல்லது இத்தகைய நிலைமைகளே தொடர்ந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற ஒரு நிலை தோன்றுமானால் எதிர்காலத்தில் மிக மோசமானதொரு வெள்ள ஆபத்தினை மட்டக்களப்பு மாவட்டம் சந்திக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே குறிப்பிடலாம். இத்தகைய பின்னணியில் இவ்வாறானதொரு அனர்த்தத்தைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால் நாம் அடிப்படையில் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் பல காணப்படுகின்றள.
1. வாவி அளவுக்கதிகமான அடையல்களால் படியவிடப்பட்டு, அதி உச்ச நீரைக் கொள்ளும் திறனை இழந்துள்ளது. நீரடித்தளப் பகுப்பாய்வின் (டீயவாலஅநவசல யயெடலளளை) அடிப்படையில் படிவுகள் காரணமாக தட்டiயான களமாகப் வாவியின் பல இடங்கள் மாறியுள்ளது. (படம்-1 ஐ பார்க்கவும்). மொத்தமாக நீரைக் கொள்ளும் திறனில் சுமார் பங்கு படிவுகளால் நிரம்பி உள்ளது. இதனால் வாவி பெருக்கெடுக்கும் நிலை அடிக்கடி ஏற்படுகின்றது. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை கிடைக்காத போதும், குளங்கள் வான் பாயாத நிலையிலும், மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்து விவசாய நிலங்கள் நீருள் மூழ்கும் நிலை ஏற்படுகின்றன, இதனால் முகத்துவாரத்தை வெட்டித் திறந்துவிடுங்கள் என்ற கோரிக்கை விவசாயிகளிடமிருந்து முன்வைக்கப்படுகின்றன. அக்கோரிக்கைளின் அடிப்படையிலேயே மீனவர் – விவசாயி முரண்பாடுகளுக்கு மத்தியில் கடந்த 10.11.2024 இல் முகத்துவாரம் திறக்கப்பட்டது. இன்று முகத்துவாரம் வௌ;வேறு சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டின் ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் இந்த முரண்பாடு வேறு வடிவங்களை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவற்றுக்கு ஒரே தீர்வு வாவியை ஆழப்படுத்தி அதனுடைய நீர் கொள்ளும் கொள்ளவை (றுயவநச உயியஉவைல) அதிகரிப்பதற்கான செயற்றிட்டத்தை தாமதப்படுத்தாமல் முன்னெடுக்க வேண்டும். அது வெள்ளப் பாதிப்புக்களை குறைப்பதற்கான வழிமுறையாகவும், வாவியின் பொருளாதார திறனை மேம்படுத்துவதற்கான திறவு கோலாகவும் அமையும்.
2. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 56 தோணாக்கள் காணப்பட்டன. அவற்றுள் பல இன்று காணாமல் போயுள்ளன. அவற்றைத் தேடிச் சென்று பார்த்தால், அதன்மீது குடியிருப்புகளும், அபிவிருத்தித் திட்டங்களும், பயிர்ச் செய்கையுமாக வேறு வடிவத்தில் அவை மாறிக் கிடப்பதை காணமுடிகின்றது. அத்தோடு செயற்பாட்டில் உள்ள தோணாக்களும் பராமரிப்பின்றி செயலிழந்து போகும் நிலையில் உள்ளது. ஆகவே எஞ்சியுள்ளவற்றையாவது மறுசீரமைப்பதற்கான திட்டங்களை உடனடியாக வகுத்து நடைமுறைப்படுத்துதல் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குள்ள தலையாய கடமையாகும்.
3. வடகீழ் மொன்சூன் பருவம் என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம், சூறாவளிக்குரிய ஒரு பருவம் என்பதனால் அதனை மனதிற்கொண்டு பொதுமக்களை விழிப்புடனும், தயார் நிலையிலும் வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கான அடிப்படை திட்டங்களை விருத்தி செய்து, அதனை முன்னெடுப்பதற்கு அதுசார்ந்த நிறுவனங்கள் முதலில் தம்மைத் தயார் நிலையில் வைத்துக்கொள்வது மிக மிக அவசியமாகும். அதனை எப்படி முன்னெடுப்பது என்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை துறை சார்ந்தவர்களுடன் இணைந்து தயாரித்து வைத்திருப்பது இப்பருவத்திற்குப் பொருத்தமான செயற்பாடாகும்.
4. நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் வடகீழ் மொன்சூன் பருவ ஆரம்பத்திலேயே உரிய நீர்ப்பாசன குளங்களை 24 மணி நேர தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்துவதனை உறுதிப்படுத்துவது அவசியம். ஒவ்வொரு மணி நேரமும் குறித்த குளத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைப் பொறுத்து படிப்படியாக வான் கதவுகளை திறப்பதனால் ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியும். பல குளங்கள் தூர்வாருதலுக்கு உட்பட வேண்டிய நிலையில் உள்ளது. அவற்றின் நீர் தாங்கு திறனை அதிகரிப்பதும் அவசியத் தேவையாகும்.
வடகீழ் மொன்சூன் பருவம் இன்னும் கடந்து போகவில்லை. அதனுடைய செல்வாக்கு பெப்ரவரி வரை நீடிக்கும் நிலையில் வெள்ளமோ, புயலோ மீண்டும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஆகவே வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முன்னாயத்த முயற்சிகளில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
முடிவுரை
மட்டக்களப்பு மாவட்டம் பல்லினத்துவமான வளங்களின் பரம்பலைக் கொண்டு விளங்கும் பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பிரதேசம். கைத்தொழில்களை ஓரிடப்படுத்துவதற்கான பௌதிக, மானிட வளங்கள், மீன்பிடி, விவசாயம் போன்றவற்றுக்கு ஆதாரமான நீர் வளங்கள், கால்நடைகள் மாவட்டத்தின் மிகப் பெரிய சொத்து, மணல், களிமண் ஆகியவை மாவட்டத்தின் தேவைக்கு அதிகமாகக் காணப்படும் பிரதானமான வளங்கள் ஆகும். மேலும் பல்வகைச் சுற்றுலாவுக்கான வாய்புள்ள பரந்த புவியியல் இடவமைவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமாக உள்ளன. இவையனைத்தும் தாழ்நிலத்துள் அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பாதுகாப்பதற்கான திட்டம் வெள்ள அபாயங்களை தணிப்பதற்கான திட்டங்களோடு நேரடியான தொடர்பு கொண்டவை. ஆதலால், மேலே கூறப்பட்ட முன்மொழிவுகள் இவ்வளங்களின் நிலைத்திருக்கவல்ல அபிவிருத்திக்கும் ஆதாரமானவையாக அமையும். ஆகவே மாவட்ட அபிவிருத்தி என்பது ஒரு பிரதேசத்தின் அல்லது ஒரு நாட்டின் அனுபவத்தை அப்படியே இங்கு அமுல்படுத்துதால் அடைந்துவிடக் கூடியவையல்ல, இப்பிரதேசத்தின் பௌதிக, மானிட தனித்துவங்களை அனுசரித்து, அதற்கேற்ற வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனால் அடைவதாகும். எனவே! பிரதேச அபிவிருத்தியும், பாதுகாப்பும் பலநிலைகள் சார்ந்ததாகவும், ஒன்றோடொன்று தொடர்புபட்டதாகவும் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியமாகும்.
படம்-1: வாவியின் சுமார் 90மூ க்கும் அதிகமான நீர் பரப்பு 2 மீற்றருக்கும் குறைவான ஆழத்தைக் கொண்ட தட்டையான பகுதியாகக் காணப்படுகின்றது. ஆதலால் குறைந்த அளவு நீர் கிடைக்கப்பெறும் பட்சத்தில் வாவி பெருக்கெடுக்கும் நிலை தோன்றுகின்றது. சுமார் 5இ929இ043.78 அ3 அளவுடைய படிவுகள் வாவியிலிருந்து அகற்றப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது. முன்னுரிமை அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட வாவி பகுதியில் படிவுகளை அகற்றி, ஆழப்படுத்துதல் இன்றியமையாதவையாகும்.
சிரேஷ;ட விரிவுரையாளர், புவியியற்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
Contacts: [email protected] , +94 77 7977404