மன்னார் மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை (02.) காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை இடம்பெற்றது. நடமாடும் சேவைக்கு முன்னதான மன்னார் மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரனால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் புலவு காணிகளில் அமைக்கப்பட்டுள்ள அரச கட்டிடங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை மன்னார் மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக மன்னார் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார். குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன மக்கள், அரச திணைக்களங்கள் பயன்படுத்திய பல காணிகளை தமக்குரியது என வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.