யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவு சபை வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாய உற்பத்தியாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடலானது அண்மையில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. அங்கு கலந்துரையாடப்பட்ட விடையங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
கிராமியப் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளது. அதிலிருந்து பெறப்படும் பாலானது குடும்பங்களின் பன்மை-வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியமான பாலானது வீட்டில் கால்நடைவளர்போருக்கு பொருள்- வருமானமாகவும் மேலதிக பால் உற்பத்தி பண-வருமானமாகவும் உள்ளது.
எவ்வாறானபோதிலும் 1977ற்கு பின்னரான இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் கிராமப்பொருளாதாரத்தை கைவிட்டது. விவசாயத்தில் ஒன்றான கால்நடைவளர்ப்புக்கு முக்கியத்துவம் படிப்படியாக குறைவடைந்து உற்பத்தி வீழ்ச்சியடைந்து பால்மா இறக்குமதிகள் அதிகரித்தது. இதன் விளைவாக இலங்கையானது விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட நாடாகக் காணப்பட்ட போதிலும் பால்த் துறையில் 40சதவீதமான தன்னிறைவையே அடைந்துள்ளது. 60சதவீதமான பால்மா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இலங்கையில் பால்மா இறக்குமதி மூலம் தனியார் துறை அதீத வளர்ச்சி கண்டது இதன் காரணமாக உளிர் பண்ணையாளர்களின் வளர்ச்சி வருமானத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த தங்கியிருத்தல் பொருளாதாரத்தின் தாக்கம் இலங்கை 2022ம் ஆண்டு வங்குரோத்து நிலையை அடைந்தபோது ஏற்பட்ட பால்மா தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பில் வெளிப்படையாக வந்திருந்தது. இந்நிலையானது குறைந்தது ஐந்து வருடம்நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நெருக்கடி காலத்தில் இருந்து அவதானிக்கும் போது பசுப்பாலானது செல்வந்தரின் உணவாக மாறியுள்ளது. 1977ம் ஆண்டில் இருந்து தனியார் துறை பால் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதனால் பால் உற்பத்திகள் பெரும் நிறுவனங்கள் கொள்வனவு செய்து பெட்டிப்பாலாக விற்று லாபம் பார்க்க தொடங்கினர். இன்று கால்நடை வளர்ப்பாளரிடம் ரூபாய் 160-180 என்ற விலைகளில் கொள்வனவு செய்யப்படும் பால் பெட்டிப்பாலாக ரூபாய் 550 தொடக்கம் ரூபாய் 600 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. இங்கு கால்நடைவளர்ப்பாளர்களின் ஊழியத்திற்கேற்ற கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. தனியார் துறையினர் இவர்களின் உழைப்பை சுரண்டி தாம் இலாபத்தை ஈட்டிக்கொள்கிறார்கள். எமது கண்களுக்கு புலப்படாத வண்ணம் பாலுக்கான புரட்சிப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த பால் புரட்சிக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறோம். பண்ணையாளரிடமிருந்து நியாயமான விலையில் எவ்வாறு கொள்வனவு செய்யலாம் நுகர்வோருக்கு நியாயமான விலையில் எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டிய காலம் வந்தாயிற்று.
தற்போது உள்ள அரசானது கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவென பொருளாதார கொள்கைகளை வகுக்கிறார்கள். கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அதனை வளப்படுத்த துணைநிற்கும் கூட்டுறவுத் துறைக்கும் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதுடன் கூட்டுறவுத் துறையை வடமாகாணத்தில் மட்டுமல்லாது ஏனைய மாகாணங்களிலும் வலுப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இச்சாதகமான சூழலை பயன்படுத்தி எவ்வாறு பண்ணையாளர்களையும் கால்நடைக்கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்துவது என்று பார்க்கவேண்டிய காலமாகவுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி வினைத்திறனான பண்ணை என்பது 4 தொடக்கம் 6 மாடுவளர்க்கும் சிறு பண்ணை ஆகும். சிறு உற்பத்தியாளருக்கு வினைத்திறனான பண்ணையை அதாவது 4-6 மாடுகளை வளர்ப்பதற்கு ஏதுவான வகையிலான நிதித் திட்டங்களை உருவாக்கல,கால்நடை தீவனம் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளல் மற்றும் சரியான மருத்துவவசதிகள் வழங்குதல்மூலம் அவர்களின் உற்பத்தியை அதிகரிக்கப்பார்க்கவேண்டும். மேலும் இவர்களின் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இந்த சேவைகள் வழங்கப்படும் போதும் அவை பெறுமதி சேர் உற்பத்திகளில் ஈடுபடும்போதும் பண்ணையாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதோடு நுகர்வோருக்கும் ஆரோக்கியமான உணவினை குறைந்தவிலையில் வழங்கக்கூடிய நிலை ஏற்படும். இங்கு பாலுக்கான அணுகலோடு கூட்டுறவால் கிராம, பிராந்திய மட்டத்தில் பாலின் விலையை தீரமானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியமும் உண்டு.
இந்தப்பால் புரட்சிப்போராட்டத்தில் கூட்டுறவு மற்றும் சிறு பண்ணையாளர்களின் தந்திரோபாயம் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட தரமான பால் உற்பத்தி மேற்கொள்வதாக இருக்க வேண்டும். அதற்காக பால் பெறுமதி அதிகரிப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறான தரமான உற்பத்தியை மேற்கொள்ளும் கூட்டுறவு மையங்கள் 3 ஏனும் வடமாகாணத்தில் உருவாக்கபடவேண்டும். பால்சார் பெறுமதிசேர் L160 புதிய உணவு உற்பத்திகளை உருவாக்கி சந்தைப்படுத்தல் வேண்டும். 3 மணி நேரங்களில் பழுதடையும் பாலினை 3 மாத காலங்களுக்கு மேற்பட்டு பயன்படுத்தும் அளவிற்கு பெறுமதி சேர் உற்பத்திப் பொருளாக மாற்றியமைத்தலே எமது இடைக்கால திட்டமாக இருக்கவேண்டும். அதற்கு எம்மிடம் இருக்கும் வளத்தினை. கூட்டுறவு சொத்துக்களை மீள்செயற்பாட்டிற்கு கொண்டுவருதல் வேண்டும். மாகாணத்தில் உள்ள கால்நடைகூட்டுறவு சங்கங்கள் இதற்காக ஒன்றினைந்து செயற்படவேண்டும்.
உணவு இறைமை பற்றி ஆய்வாளர்களும் செயற்பாட்டளார்களும் வலியுறுத்திவருகிறார்கள் எமது மக்களுக்கு விருப்பமான, பொருத்தமான உணவுகளை உற்பத்தி செய்து எமது மக்களுக்கு விற்பனை செய்தலே உணவு இறைமை எனப்படும்.இந்நிலையில் இலங்கை மக்களின் உணவு இறைமையை இவ்வளவு காலமும் வெளிநாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்களிற்கு விற்ற காலத்தை மாற்றியமைக்கவேண்டிய நேரமும் சந்தர்ப்பமும் வந்துள்ளது.
கிராமப்புற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பால் துறையை வளர்ப்பதற்கும் தேசிய ரீதியில், மாகாண ரீதியில், கிராம ரீதியில் மற்றும் கூட்டுறவு ரீதியில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். தற்போது அதற்காக கிடைத்திருக்கும் வாய்ப்பினை சரியாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கிடைக்கப்பெற்ற வாய்ப்பை சரிவர பயன்படுத்தி எமது பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்ப போகின்றோமா இல்லை தனியார் துறையின் கை அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு கொத்தடிமைகளாக வாழப்போகின்றோமா?
ஜதின் அஜீவா
அபிவிருத்தி உத்தியோகத்தர்,
வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி.