51
வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் வரவுப் பதிவேட்டு இயந்திரத்தில் கையொப்பமிடுவது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டது. மாதத்தில் 14 நாள்கள் வெளிக்கள கடமையில் ஈடுபடுவதுடன், பிரதி திங்கட் கிழமைகளில் வரவு பதிவேட்டு இயந்திரத்தில் கையெழுத்திட்டு அலுவலகக் கடமைகள் ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
அதேவேளை, விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களப் பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
அதேவேளை வெளிக்கள கடமைகளைச் சரிவரச் செய்யாத உத்தியோகத்தர்களுக்கும், தவறிழைத்ததாகக் கண்டறியப்படும் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
பதில் கடமையாற்றும் விவசாயப் போதனாசிரியர்களுக்கு அதற்குரிய கொடுப்பனவுகள் மற்றும் நிலுவைக் கொடுப்பனவுகளை விரைந்து வழங்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாயத்துறைசார் திட்டங்கள் தொடர்பில் மாகாண விவசாயத் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட திட்டமுன்னெடுப்பு நிறுவனங்கள் கலந்துரையாடவேண்டும் எனவும், அந்தத் திட்டத்தில் பணியாற்றும் வெளிக்களப் பணியாளர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரை ஆளுநர் பணித்தார்.
வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயப் போதனாசிரியர்களுக்கு இடையிலான இடமாற்றத்தை முன்னெடுக்க விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக உரிய முறையில் அதைச் செயற்படுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு கமநலசேவை நிலையங்களுக்கும் (ஏ.பி.சி.) மூத்த விவசாயப் போதனாசிரியர் ஒருவரை பொறுப்பாக நியமிப்பது தொடர்பிலும் அதற்குரிய பொறுப்புக்கள் தொடர்பாகவும் ஆளுநரால் பணிப்புரை வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பாக பணியாற்றும் வெளிக்களப் பணியாளர்களுக்கு அவர்களுக்கான சேவைகளை மெச்சும் வகையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் அறிவுறுதல் வழங்கினார்.
இதேவேளை காலத்துக்குகாலம் விவசாயப் போதனாசிரியர்களுடன் குறைகேள் சந்திப்பு நடத்தப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதைச் செயற்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
Spread the love