1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் கட்டடத்துக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பல ஆண்டுகளாக முயற்சிகள் முன்னெடுத்தபோதும் அவை எவையும் சாத்தியப்படவில்லை என்றும் அதனைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம், யாழ்ப்பாண ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண ஐக்கிய வியாபார சங்கத்தின் நிர்வாகத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய சனிக்கிழமை இடம்பெற்றது.
அதன்போது, 1984ஆம் ஆண்டு தமது கட்டடம் எரிக்கப்பட்டதுடன் அதில் பணிபுரிந்த இரண்டு பணியாளர்களும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் கட்டடத்துக்கான இழப்பீட்டைப் பெற்றுத் தந்தால் அதனைப் பயன்படுத்தி புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தம்மால் மேற்கொள்ள முடியும் எனவும் ஆளுநரிடம் தெரிவித்தனர்.
அதேவேளை அரக்கலய போராட்ட காலத்தில், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டமை, சொத்துக்கள் நாசமாக்கப்பட்டமைக்காக, அண்மையில் கோடிக் கணக்கான ரூபாய்க்கள் நஷ்டஈடாக வழங்கப்படுள்ள நிலையில் 40 வருடங்களுக்கு மேலாக நஷ்டஈடு கோரி வரும் ஐக்கிய வியாபார சங்கத்தினருக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது