தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரைக்காகத் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்திற்குக் காணி உரிமையாளர்கள் அழைப்புவிடுத்திருக்கும் நிலையில், தமிழ் அரசியல்வாதிகள் அந்தப் போராட்டத்திற்குக் கட்சி வேறுபாடின்றித் தமது ஆதரவை வழங்க முன்வருவதோடு ஆதரவுக் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்றும் அது அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது என்றும் கூறியதோடு இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன், தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்கத் தான் இடமளிக்கமாட்டேன் என எச்சரிக்கும் பாணியில் உதய கம்மன்பில கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

