தையிட்டியில் விகாரையை இடிக்க வாரீர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பு விடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இலட்ச ரூபாய் சரீர பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாக பலாலி காவல்துறையினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது குற்றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று அழைப்பாணை விடுத்திருந்தது. அதன் பிரகாரம் மன்றில் முன்னிலையான போதே கஜேந்திரகுமாரை பிணையில் செல்ல மன்று அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது
இதேவேளை குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.