Home இலங்கைவட்டுவாகல் பாலத்தினைச் சீரமைக்க ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வட்டுவாகல் பாலத்தினைச் சீரமைக்க ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

by editorenglish

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்பக் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (17/2/2025) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.

இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நிதியை இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

அந்த வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியதுடன், இக்கூட்டத்தின் பின்னர் பிரதி அமைச்சர் மற்றும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் அனைவரையும் நேரடியாக வட்டுவாகல் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்ப்பாடுகள் குறித்து நேரடியாகக் காண்பித்திருந்தார்.

அதன் பின்னர் கடந்த வருடம் டிசம்பர் 04ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது நாடாளுமன்ற முதல் உரையில், வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதன்போது வட்டுவாகல் பாலம் அமைப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வட்டுவாகல் பாலம் அமைப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் உறுதியளித்திருந்தார்.

இத்தகைய சூழலிலேயே இன்று திங்கட்கிழமை (17/2/2025) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்தை ஆரம்பிப்பதற்கு ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More